உன்னைப் படைத்தது யார் ? ஏன் படைத்தான்? மரணித்த பின் என்ன நிகழும்? என்பது பற்றி உன்னை நீயே கேட்டதுண்டா?
உன்னைப் படைத்தது யார் ? ஏன் படைத்தான்? மரணித்த பின் என்ன நிகழும்? என்பது பற்றி உன்னை நீயே கேட்டதுண்டா?
இறைவனின் இருப்பு, அவனின் படைப்பு பற்றிய சந்தேகங்களுக்கான தெளிவை இக்கையேடு ஆராய முற்படுகிறது. பரிபூரண ஞானமிக்க ஒரு படைப்பாளன் இருப்பதை சிந்தனைப்பூர்வமாக இது நிரூபிக்கிறது. அல்லாஹ்வை மட்டும் வணங்குவதே வாழ்வின் நோக்கம் எனவும், இஸ்லாம் மட்டுமே எவ்வித மனிதக் கையூடல்கள் இன்றி பாதுகாப்பட்ட மார்க்கம் எனவும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ﷺ அவர்களை நம்பிக்கை கொண்டு, அவரின் போதனைகளைப் பின்பற்றுமாறும், ஓரிறைக் கொள்கைக்கு எதிராக நடக்கக் கூடாது எனவும், மரணத்திற்குப் பிறகு இவ்வுலகில் நடந்துகொண்டது பற்றி விசாரணையும், அவற்றுக்கான வெகுமதிகளும் கிடைக்கும் எனவும் இது தெளிவுபடுத்துகிறது.
மொழி: lang_ta
தயாரித்தவர்: பல்மொழிகளில் இஸ்லாமிய உள்ளடக்கத்திற்கு சேவை செய்வதற்கான சங்கத்தின் கல்விக் குழு
உன்னை படைத்தது யார் ? ஏன் படைத்தான்? மரணித்த பின் என்ன நிகழும்? என்பது பற்றி உன்னை நீயே கேட்டதுண்டா?
பல்மொழிகளில் இஸ்லாமிய உள்ளடக்கத்திற்கு சேவை செய்வதற்கான சங்கத்தின் கல்விக்குழு
மனிதா! உன்னைப் படைத்தது யார்? உனது உடம்பை நுண்ணோக்கியால் பார்த்தால் அங்கு அதிசயமும், துல்லியமும் நிறைந்த ஒரு உலகையே உன்னால் பார்க்க முடியும். உன் உடலின் ஒவ்வொரு செல்லிலுமுள்ள பல வகையான பண்பியலைக் கொண்ட மரபணுக்கள் ஒவ்வொன்றிலும் சிக்கலான மரபுத் தகவல்கள் காணப்படுகின்றன. இம் மரபணுக்கள் ஒவ்வொன்றையும் உருவாக்கி, அதற்குரிய சரியான இடங்களில் அவற்றை பதித்து வைத்தது யார் என எப்போதாவது நீ உன்னிடம் கேட்டதுண்டா?
உயரமான ஒவ்வொரு கட்டிடமும், தாழ்வாக இருக்கும் ஒவ்வொரு எளிய வீடும், அவற்றை உருவாக்கியவரின் கதையைப் பேசுகின்றன; இம்மாபெரும் பிரபஞ்சம் அதன் அழகும் துல்லியமும் ஒழுங்கமைப்பும் கொண்டிருப்பதைப் பார்த்து, படைப்பாளன் இன்றி உருவானது என்று நம்புவது எப்படி சாத்தியம்?
மனிதா! நுட்பமான முறையில் இயங்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கையடக்கத் தொலைபேசி யாரும் உருவாக்காமல் தானாக அது உருவாகியது எனக் கூறினால் உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? பல கருவிகளால் உருவான சிக்கலான, துள்ளியமாகவும், இயைபாகவும் இயங்கும் வலைப்பின்னல் எந்த வடிவமைப்பாளரும், கட்டுப்பாட்டாளர் இன்றியும் சுயமாக இயங்குகிறது என்றால் உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அவ்வாறு தான் நுட்பமான ஒழுங்குடனும், அற்புதமான அமைப்புகளுடனும், சீரான சட்டவிதிகளின் படியும் இம்மாபெரும் பிரம்மாண்ட பிரபஞ்சம் படைப்பாளன் இன்றி இயங்குகிறது என்று சொன்னால் மட்டும் உன்னால் எவ்வாறு ஏற்க முடிகிறது?!
இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துண்டும், மிகச் சிறிய அணுவிலிருந்து மிகப் பெரிய விண்மீன் வரை, அவற்றின் படைப்பாளனின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன; இத்தகைய துல்லியமான ஒழுங்கு ஒழுங்கற்ற நிலையில் இருந்து தோன்றியது என்பது பகுத்தறிவுரீதியாக சாத்தியமற்றது. இப்பிரபஞ்சம் இல்லாமையிலிருந்து தோன்றியது அல்லது இந்த அற்புதமான சிக்கலான அமைப்பு எதேச்சையான குருட்டு சாத்தியத்தின் விளைவு என்பதைக் கற்பனை செய்வதை அறிவு மறுக்கிறது!
பகுத்தறிவு மற்றும் சீரான இயல்பு மனிதனைப் படைப்பாளன் இருப்பதை நம்ப வைக்கின்றது. அதேபோல அவனது பண்புகளைப் பற்றியும் அவன் மீது நமக்கு உள்ள கடமைகளைப் பற்றியும் சிந்திக்கவும் அவை நம்மைத் தூண்டுகின்றன.
இந்த படைப்பாளனின் பண்புகளைப் பற்றிய ஆழமான சிந்தனை, அவன் முழுமையான பரிபூரணத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தையும், அனைத்து குறைபாடுகளிலிருந்தும் அவன் தூய்மையானவனாக இருக்க வேண்டும் என்பதையும் பற்றிய ஆழமான புரிதலின் கதவுகளை நமக்கு திறக்கின்றது.
இது படைப்பாளன் அனைத்து அழகிய மற்றும் மகத்தான பண்புகளையும் கொண்டிருப்பதை குறிக்கிறது. அவன் மிகப்பரிச்சுத்தமானவன், அனைத்தையும் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவன், அனைத்தையும் அறிந்தவன், தனது படைப்புகளிலும் திட்டமிடலிலும் மிகுந்த ஞானம் கொண்டவன். இந்த பரிபூரணத்தன்மை ஒரு எதேச்சையல்ல, மாறாக பகுத்தறிவின் அடிப்படையில் நிரூபணமானது. ஏனெனில் அவனின் பண்புகளில் எவ்வித குறைபாடுகள் இருந்தாலும், அவை படைப்பிலும் நிர்வாகத்திலும் குழப்ப நிலையை ஏற்படுத்தும். இது, பிரபஞ்சத்தில் காணப்படும் துல்லியத்தன்மையுடன் முரண்படுகின்றது.
குறைபாடுகளிலிருந்து அப்பாற்ப்பட்டவனாக இருப்பது, படைப்பாளன் தனது படைப்புகளிடத்தில் தேவையற்றவனாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அவனுக்கு யாரிடமும் தேவையில்லை, மாறாக அனைவரும் தங்களின் இருப்புக்கும் நிலைத்தன்மைக்கும் அவனிடம் தேவையுடையவர்களாக இருக்கின்றனர். அவன் துணை மற்றும் பிள்ளை என்பவற்றிலிருந்து தூய்மையானவன், ஏனெனில் அவை குறைபாடு மற்றும் பலவீனத்தின் வெளிப்பாடுகளாகும். அல்லாஹ் அவற்றிலிருந்து அப்பாற்ப்பட்டவனாவான்.
எனவே, அல்லாஹ் மகத்தான இறைவனாகவும், முழுமையும் மகத்துவமும் நிறைந்த பண்புகளைக் கொண்டவனாகவும், எம்மையும், இப்பிரபஞ்சத்தையும் இல்லாமையிலிருந்து உருவாக்கியவனாகவும், அதில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளனாகவும், எமக்கு வாழ்வாதாரத்தை வழங்கி, தனது கருணையால் எம்மை சூழ்ந்தவனாகவும், அனைத்தையும் ஒழுங்கமைத்து நடத்துபவனாகவும் இருக்கின்றான் எனில், அவனுக்கு நன்றி செலுத்தி, அவனின் திருப்பொருத்தத்தை எவ்வாறு அடைவது, அவனுக்கு எமது கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது, எம்மைப் படைத்த நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதனை ஆராய்ந்து செயல்பட வேண்டாமா?
அல்லாஹ் எம்மைப் படைத்து விட்டு எம்மிடமிருந்து எதை விரும்புகிறான் என்பதையும், ஏன் நாம் இங்கே இருக்கிறோம் என்பதையும், எமது இவ்வுலக வாழ்வின் நோக்கமும் இலக்கும் என்ன என்பதையும், இறந்த பிறகு எமக்கு என்ன நடக்கும் என்பதையும் எமக்கு விளக்காமல் விட்டுவிட்டான் என்பது ஏற்கமுடியுமான ஒன்றா?
ஒரு மனிதன் மிகச் சிறந்த அரண்மனையை கட்டி, அதனை நவீன தொழில்நுட்ப வசதிகளால் நிரப்பி, கட்டுமானத்தை முடித்தவுடன், எந்த காரணமும் இன்றி அதனை முழுமையாக இடிக்க முனைந்தால், அந்த மனிதன் ஞானமிக்கவன் என நாம் கூறமுடியுமா? அறிவாளிக்கு ஏற்றதல்லாத, வீணான செயலாக இதனைப் பார்க்க முடிகிறதல்லவா?
இந்த செயல் ஒரு மனிதனின் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தால், ஞானமுள்ள, அறிவுள்ள அல்லாஹ் இவ்வளவு அழகிய, செம்மையான பிரபஞ்சத்தை படைத்து, பின்னர் அதை எந்த இலக்கோ அல்லது ஞானமோ இல்லாமல் அழித்துவிடுவான் என்று நாம் எப்படி கற்பனை செய்ய முடியும்?!
அல்லாஹ் மனிதர்களை ஓர் மகத்தான நோக்கத்திற்காகப் படைத்துள்ளான். அதுதான் அவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்பது. அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. மேலும் இந்த உலகில் அவர்களைச் சோதிக்கவும் படைத்துள்ளான். மேலும் அவர்கள் மறுமை நாளில் எழுப்பப்பட்டு தங்கள் செயல்களுக்கு கணக்கெடுக்கப்படும் ஒரு நாளை அவர்களுக்கு நிர்ணயித்துள்ளான். அல்லாஹ்வை நம்பி அவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டவர்கள் சுவனத்தின் இன்பத்தில் நிரந்தரமாக வாழ்வார்கள். உண்மையை புறக்கணித்தவர்கள் நரகவாசிகளாக ஆவார்கள்.
ஆக வணக்கம் என்பது எம்மீது விதிக்கப்பட்ட கட்டாயக் கடமையாகும் ஏனெனில் அதுவே எமது இருப்பின் நோக்கமாகும். மேலும் அது அல்லாஹ்வின் இறையாண்மையையும், அவனது இறைத்தன்மையையும் ஒப்புக்கொண்டு நன்றி செலுத்துவதற்கான சான்றாகும்.
அல்லாஹ் உன்னைப் படைத்து, கேட்கும் திறனையும் பார்வை திறனையும் அளித்து, எண்ணிக்கையற்ற அருட்கொடைகளால் உன்னைச் சூழ்ந்தவனாக இருக்கிறான் என்பதை சிந்தித்துப் பார். உன் நரம்புகளில் இரத்தத்தை ஓடச் செய்வதும், நீரையும் காற்றையும் உனக்கு வழங்குவதும் அவனே. ஒவ்வொரு கணத்திலும் நீ அவனது அருளுக்கும் கவனத்திற்கும் தேவையுடையவனாக இருக்கிறாய். அவனது கருணையும் பராமரிப்பும் இல்லையென்றால், நீ அழிந்து உன் ஆற்றல் இல்லாமல் போயிருக்கும். மேலும், நீ உன் தாயின் கருவில் இருக்கும் போது, உனது வாழ்வாதாரத்தை அவன் மாத்திரமே உறுதி செய்தான்; அப்போது நீ எதையும் செய்ய இயலாதவனாக இருந்தாய்.
இந்த மகத்தான படைப்பாளனான அல்லாஹ்வை அவன் விரும்பும் விதத்தில் வணங்கி வழிபடுவதற்கு அவன் தகுதியானவன் அல்லவா? நீ உம் தாய்க்கு ஒரு பரிசு அளிக்க விரும்பினால், உம் விருப்பத்திற்கு ஏற்பதைக் கொடுப்பாயா அல்லது அவள் விரும்பும் பொருளைத் தேர்ந்தெடுத்து அவளை மகிழ்விக்க முயற்சிப்பாயா? அதேபோல அல்லாஹ்வின் வழிபாடு, நம் விருப்பங்களோ அல்லது வழக்கங்களோ அடிப்படையில் இருக்கக் கூடாது, மாறாக அவன் விரும்பியவாறு, அவன் எமக்கு ஏவியவாறு இருக்க வேண்டும்.
வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருத்தல் வேண்டும், அவனுக்கு இணை யாருமில்லை. மனிதன் தனது படைப்பாளியைத் தவிர வேறு யாருக்கும் வணக்கத்தை அர்ப்பணிக்கக் கூடாது. நிரந்தர நரகத்தை உண்டாக்கும் மிகப்பெரிய பாவம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அதாவது மனிதன் அல்லாஹ்வைத் தவிர அவனின் படைப்புகளை வணங்குவது. உதாரணமாக சிலைகள், சூரியன், சந்திரன், அல்லது சக மனிதர்கள், விலங்குகள், அல்லது நல்ல மனிதரை வணங்குவது போல. இவை அனைத்தும் இணைவைப்பும் இறை நிராகரிப்பும் ஆகும். இதிலே ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் தண்டனை நிரந்தரமாக நரகத்தில் இருப்பதாகும்.
அல்லாஹ் பல்வேறு நபிமார்களையும் தூதர்களையும் நம்முடைய இவ்வுலக வாழ்வின் நோக்கத்தையும் வாழ்க்கையின் குறிக்கோளையும் எத்திவைக்க அனுப்பினான். அனைத்து தூதர்களின் செய்தியும் ஒன்றே. அது ஒரே இறைவனாகிய படைப்பாளனை இணைவைக்காமல் வணங்குவதற்கான அழைப்பு. ஆனால், சிலர் முந்தைய தூதர்கள் கொண்டு வந்தவற்றை மாற்றி திரிபுபடுத்தினர். எனவே, இறுதித் தூதராக முஹம்மத் ﷺ அவர்களை அனுப்பி, மனிதகுலத்திற்கான இறுதி இறைச்செய்தியாக அல்குர்ஆனை இறக்கியருளினான். அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதற்கான பல்வேறு பகுத்தறிவு மற்றும் அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. அது மட்டுமே மாற்றமுறாமல் பாதுகாக்கப்பட்ட ஒரே நூலாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் நமக்கு, இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர வேறு எதையும் மனிதனிடமிருந்து ஏற்கமாட்டான் என அறிவித்துள்ளான். மேலும், அனைத்து தூதர்களின் செய்தியும் ஒன்றே: படைப்பாளனை இணைவைக்காமல் வணங்குவதற்கான அழைப்பே அது. மேலும், அல்லாஹ் அல்குர்ஆனில் நமக்கு, ஈமான் கொண்டவர்களுக்கு சுவனமும் நிரந்தர மகிழ்ச்சியும் உண்டு என்றும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையாவது வணங்கியவர்களுக்கு அல்லது இஸ்லாமில் நுழைய மறுத்தவர்களுக்கு நரகமும் கடுமையான வேதனையும் உண்டு என்றும் அறிவித்துள்ளான்.
மற்ற மதங்களிலிருந்து இஸ்லாமை வேறுபடுத்துவது என்னவெனில், முஸ்லிம்கள் மாத்திரமே நம்பகமான அறிவு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, இன்று அவர்களிடம் உள்ள சங்கைமிகு குர்ஆன், மாற்றம் மற்றம் திரிபிலிருந்து பாதுகாக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தையாகும் என்பதை நிரூபிக்க அறிவார்ந்த ஆதாரங்களையும், அறிவியல் உண்மைகளையும் வழங்கக் கூடியவர்களாக உள்ளனர்.
அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வினால் நபி முஹம்மத் ﷺ அவர்களுக்கு அருளப்பட்ட வேதமாகும். இது பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித குலத்துக்கு சவால் விடுத்து, இதைப் போன்ற ஒன்றை அல்லது இதிலுள்ள ஒரு அத்தியாயத்தைப் போன்ற ஒன்றை கொண்டுவருமாறு கூறியது. ஆனால் அதனை யாராலும் செய்ய இயலவில்லை. இன்றுவரை இச்சவால் தொடர்ந்து நிலவுகிறது. இதன் மொழியாற்றல், விளக்கம், அதிசயம், சட்டங்கள் ஆகியவற்றில் யாராலும் இதற்கு இணையான ஒன்றை உருவாக்க முடியவில்லை. அல்குர்ஆனின் அற்புதம் அதன் மொழியில் மட்டுமல்ல, அதில் உள்ள அறிவியல் மற்றும் பகுத்தறிவுரீதியான ஆதாரங்களிலும் உள்ளது. இவை அனைத்தும் இது அல்லாஹ்வின் வார்த்தை என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, மனித கையாடல்களால் பாதிக்கப்பட்ட பிற நூல்களை நம்புவதற்குப் பதிலாக அல்குர்ஆனில் உள்ள தெளிவான ஆதாரங்களை நம்பி, அதனை ஏற்று அதில் கூறப்பட்டவற்றை பின்பற்றுவதே நியாயமானதும், பகுத்தறிவானதுமான செயலாகும்.
சீரான பகுத்தறிவு நம்மை, பிரபஞ்சத்தை உருவாக்கி அதன் ஒழுங்கை நன்கு அமைத்தவனாகிய வல்லோன் அல்லாஹ்வின் வார்த்தைதான், உண்மையை அறிய மிக நம்பகமான ஆதாரமாகும் என்பதை உணர்த்துகிறது. அல்குர்ஆனில் மொழி, அற்புதம், அறிவியல் உண்மைகள், முழுமையான சட்டங்கள் ஆகியவை காணப்படுவதோடு, காலப்போக்கில் மாற்றமின்றி பாதுகாக்கப்பட்டிருப்பதை காணும்போது, அது அல்லாஹ்வின் வேதம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது.
எனவே, குர்ஆனில் கூறப்பட்டவற்றை நம்புவது ஒரு நம்பிக்கை சார்ந்த தேர்வாக மட்டுமல்ல, மாறாக உண்மைகளைத் தேடும் தர்க்கத்துடன் ஒத்துப்போகும் ஒரு பகுத்தறிவான முடிவாகும்.
அல்லாஹ் எம்மை வீணாகப் படைக்கவில்லை, மாறாக அவனை வணங்குவதற்காகவே எம்மை படைத்துள்ளான் என்பதை அல்குர்ஆன் மூலம் தெளிவாகக் கூறியுள்ளான்.
இறைவன் குர்ஆனில் எமக்கு அறிவித்துள்ளதாவது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலக வாழ்க்கை வெறும் தற்காலிகமான ஒரு கட்டம் மட்டுமே. இது விரைவில் முடிவடையும். ஆனால் உண்மையான நிரந்தர வாழ்வு மறுமையில் இருக்கும். அப்போது, முஃமின்கள் சுவனத்தில் நுழைவார்கள், காஃபிர்கள் நரகத்தில் நுழைவார்கள்.
அல்லாஹ் நம்மை இல்லாததிலிருந்து உருவாக்கியவன், நிச்சயமாக மரணத்திற்குப் பின் நம்மை மீண்டும் உயிர்ப்பிக்க ஆற்றல் உடையவன். அகிலத்தில் உள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளில், இறந்ததை உயிர்ப்பிக்க அவனுடைய அளப்பரிய ஆற்றலுக்கான தெளிவான ஆதாரத்தை நாம் காண்கிறோம்; எவ்வாறு அல்லாஹ் பச்சை மரத்திலிருந்து நெருப்பை உருவாக்குகிறானோ, மேலும் வரண்ட பூமியிலிருந்து பயிர்களையும் பழங்களையும் உருவாக்குகிறானோ, மேலும் தாயின் கருவறையில் ஒரு துளியிலிருந்து குழந்தையை உருவாக்குகிறானோ, அவ்வாறே அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும், மறுமை நாளில் கூலி வழங்குவதற்காக அவர்களை அவர்களது கல்லறைகளிலிருந்து எழுப்பவும் ஆற்றல் உடையவன். அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன். அநியாயக்காரரும் அநியாயத்திற்குள்ளானவரும் கேள்வி கணக்கு மற்றும் தண்டனையின்றி அவர்களுக்கு வாழ்க்கை முடிந்துவிடுவது என்பது, அநியாயமே!
ஏன் மற்ற மதங்களை அல்லாமல் இஸ்லாத்தை மட்டுமே ஏற்க வேண்டும்? என மனிதன் கேட்கலாம்
மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் வேறுபிரித்துக்காட்டுவது அறிவு ஆகும். இதன் பணி, சிந்தித்து உண்மைகளை ஆராய்வதாகும்.
இஸ்லாம் சீரிய பகுத்தறிவுடனும் இயல்புணர்வுடனும் இணைந்து போகும் ஒரு மார்க்கமாகும். அது, நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? நமது வாழ்க்கையின் நோக்கம் என்ன? மரணத்திற்கு பின் நமது நிலை என்ன? எனும் இருத்தலியல் சார் முக்கியமான கேள்விகளுக்கு நியாயமான பதில்களை வழங்குகிறது.
இஸ்லாம் என்பது படைப்பாளனை மாத்திரமே வணங்கி வழிபடுவதையும், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கத்தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லை என சாட்சி கூறுவதையும் அடிப்படையாகக் கொண்டது. இதுவே முதல் ஷஹாதா ஆகும், இது இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையாகும், அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு எவறும் உண்மையாக வணங்கத்தகுதியான இறைவன் இல்லை என்பதைக் குறிக்கிறது.
இந்த சாட்சி உள்ளடக்கியவையானது :
ஓரிறைக் கொள்கை: அதாவது, வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவனை மாத்திரம் நம்ப வேண்டும், அவனுக்கு இணையாக எவரும் இல்லை, அவனுக்கு பிள்ளைகள் இல்லை, அவனுக்கு ஒப்பானவர் எவரும் இல்லை.
இணைவைப்பை விட்டு விலகியிருப்பது : அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து சிலைகளையும் கடவுள்களையும் மறுத்தல்.
இஸ்லாம் அனைத்து தூதர்களையும் நம்புவதைக் கட்டாயமாக்குகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் அறிவித்ததுபோல, முஸ்லிம்கள் ஈஸா நபி அவர்களை அல்லாஹ்வின் அடியாராகவும், அவனின் தூதராகவும் நம்புகின்றனர். அவர் அல்லாஹ்வின் குமாரர் இல்லை ; ஏனெனில் அல்லாஹ் மகத்தானவன், அவனுக்கு மனைவியோ அல்லது பிள்ளையோ இருக்க முடியாது. அவன் அவற்றிலிருந்தும் மற்றும் அனைத்திலிருந்தும் தேவையற்றவன். அல்லாஹ் அல்குர்ஆனில் எமக்கு அறிவித்ததுபோல, ஈஸா அவர்கள் ஒரு நபி – தீர்க்கதரிசி ஆகும்; அவருக்கு அதிகமான அற்புதங்களை அல்லாஹ் அருளினான்; அவரை தனது சமூகத்திற்கு அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபடுவதின் பால் அழைப்புவிடுக்க தூதராகவும் அனுப்பிவைத்ததாகவும் அறிவித்தான். மேலும், ஈஸா (அலை) அவர்கள் மக்களிடம் தன்னை வணங்குமாறு வேண்டிக்கொள்ளவில்லை, மாறாக அவரும் அவரைப் படைத்த ஒரே இறைவன் அல்லாஹ்வை வணங்கினார் என்றும் எமக்கு அல்லாஹ் அறிவிக்கிறான். எனவே, நீர் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் விரும்பும் உண்மையான முறையில் நம்ப விரும்பினால், இஸ்லாத்தில் இணைய வேண்டும்.
அல்லாஹ் குர்ஆனில் ஈஸா (அலை) அவர்கள் தம் மக்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்குமாறு கட்டளையிட்டதாகவும், இணைவைப்பின் பால் செல்லாமல் இருக்குமாறு எச்சரித்ததாகவும் எமக்கு அறிவிக்கிறான்.
பகுத்தறிவுள்ளவன் தன்னைப் போன்ற, பசியும் தாகமும் கொண்ட, தன்னால் மரணத்தையோ அல்லது தீங்கினையோ தடுக்க முடியாத ஒரு படைப்பை எவ்வாறு வணங்க முடியும்? மனிதனே! நீர் எவ்வாறு மர்யமின் மகன் ஈஸாவை வணங்குகிறீர்? அவர் உணவுக்கும், பானத்திற்கும் தேவையுடைய மனிதராக இருந்தார், மேலும் தன் அல்லாஹ்வை தொழுது வணங்கினார். இறைவன் தன்னை தானே தொழுதுகொள்கிறார் என பகுத்தறிவால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அல்லாஹ் தான் மகத்துவம் கொண்டவன், நிறைவான பண்புகள் கொண்டவனாகவும், ஒப்பற்றவனாகவும், இவ்வுலகில் உள்ள அனைத்தையும் தன் ஆற்றலின் கீழ் வைத்தவனாகவும் இல்லையா? வானங்களையும் பூமியையும் படைத்தவன் குழந்தையாக பிறந்து, தான் படைத்தவர்களால் சிலுவையில் அறையப்படுவதற்கு தன்னை ஒப்படைக்க முடியுமா? சிலுவையில் அறையப்படுபவர்கள் மற்றும் கொல்லப்படுபவர்கள் அழிந்துபோகும் மனிதர்கள்தான், ஆனால் படைப்பாளன் என்பவன் மரணமற்ற, எப்போதும் விழிப்புடன் இருப்பவன் அல்லவா? அவனது மகத்துவமும் பெருமையும் அவனை இத்தகையவற்றிலிருந்து விலக்கப்படுத்துவதில் இல்லைவா?
அனைத்து தூதர்களும், தங்கள் சமூகங்களை இணைவைக்காமல் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதின் பால் அழைப்பு விடுத்தல் எனும் ஒரே செய்தியுடன் வந்தார்கள் என அல்லாஹ் குர்ஆனில் நமக்கு அறிவித்துள்ளான். ஆனால் காலப்போக்கில் சிலர் இந்த அழியாத செய்தியை மாற்றி, நபிமார்கள் கொண்டுவந்த ஏகத்துவத்தின் ஒளியை மறைத்துவிட்டார்கள். எனவே முன்னர் வந்த அனைத்து தூதர்களும் கொண்டுவந்த ஏகத்துவத்தின் செய்தியை புதுப்பிக்க இறுதி தூதராக முஹம்மத் ﷺ அவர்களை அல்லாஹ் அனுப்பி, அவருக்கு குர்ஆனை அருளினான்.
மனிதனே! இறுதியாக நாம் உனக்குக் கூறுவதாவது,
இஸ்லாம் என்பது புத்தியும் இயற்கையும் ஏற்றுக்கொள்ளும் மார்க்கமாகும். மனிதகுலத்திற்காக மகத்தான படைப்பாளி விதித்த ஒரே மார்க்கம் இதுவே ஆகும். ஆகவே புத்தியுள்ள ஒவ்வொரு மனிதனும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்வர வேண்டும். அதாவது அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மதை நபியாவும் விசுவாசம் கொண்டு ஏற்று வாழ்வது அவசியமாகும். இந்த விஷயத்தில் எந்த மனிதனுக்கும் தெரிவுரிமை கிடையாது. ஏனெனில் மறுமை நாளில் அல்லாஹ் தூதர்களின் அழைப்புக்கு பதிலளித்தது குறித்து விசாரிக்கவுள்ளான். யார் இறைவிசுவாசியாக இருந்தாரோ அவருக்கு மகத்தான வெற்றி உண்டு. யார் இறைமறுப்பாளனாக இருந்தாரோ அவருக்கு மிகப்பெரும் தோல்வியும் நஷ்டமும் உண்டு.
நீ இவ்வுலகில் உண்மையான மகிழ்ச்சியையும் மறுமையில் வெற்றியையும் தேடுகிறாயானால், உன் வாழ்க்கையில் எடுக்கக்கூடிய மிகச் சிறந்த முடிவு இஸ்லாத்தினுள் நுழைவதே என்பதை அறிந்து கொள். உன் மனதின் உண்மையான நம்பிக்கையுடன் இச்சொற்களை உச்சரிப்பதே நீ செய்யவேண்டியது, "அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்" (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் ﷺ அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுகின்றேன்). பின்னர் உன் மார்க்கத்தை கற்றுக்கொண்டு, மேல் குறிப்பிட்ட சாட்சியங்கள் வலியுறுத்தும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கையுடன் ஏற்று, இஸ்லாத்தின் தூண்களைப் பின்பற்றுவதில் ஈடுபட வேண்டும்.
இப்போதே அதைச் சொல்லிவிடு, தயங்காதே; மரணம் திடீரென வரக்கூடும், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முடிவை தாமதப்படுத்தாதே, நன்மையை விட்டும் உன்னைத் தடுக்க ஷைத்தானுக்கு வாய்ப்பு கொடுக்காதே, துணிவாக இரு, பிரகாசமான நேர்வழியில் பக்கம் உமது பாதையைத் தொடங்கு.
உனது முடிவை இப்போதே எடுத்து, அமைதி மற்றும் திருப்தி நிறைந்த புதிய வாழ்க்கையைத் தொடங்குவீராக!
அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியான கடவுள் எதுவுமில்லை என்றும் முஹம்மத் நபி ﷺ அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்கின்றேன்
எல்லாம் படைப்பாளியின் இருப்பைக் குறிக்கிறது வானங்களையும் பூமியையும், அவற்றில் எம்மால் அறிந்துகொள்ளமுடியாத பெரிய உயிரினங்களையும் படைத்தவன் யார்? வானத்திலும் பூமியிலும் செயற்படும் மிகவும் நுணுக்கமானதும், துல்லியமானதுமான ஒழுங்கை அமைத்தவன் யார்? மனிதனைப் படைத்து அவனுக்கு செவிப்புலனையும், பார்வையையும், பகுத்தறிவையும் வழங்கி, அறிவு ஞானங்களை பெற்றுக்கொள்ளவும், உண்மைகளை புரிந்து கொள்ளவும் தகுதிமிக்கவனாக ஆக்கியவன் யார்? உங்கள் உடல் அமைப்புகளிலும், உயிரினங்களின் உடலிலும் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பை எப்படி விளக்குவீர்கள்?அதை உருவாக்கியவன் யார்? மேலும் இம்மாபெரும் பிரபஞ்சமானது அதன் விதிகளுக்கமைவாக பல…
“பிரபஞ்சத்தையும் என்னையும் படைத்தவன் யார்? நான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்?" என்ற நூல் பிரபஞ்சம் மற்றும் மனிதனின் தோற்றத்தை ஆராய்கிறது. இப்பிரபஞ்சம் எதேச்சையாகவோ அல்லது இல்லாமையிலிருந்தோ உருவானதல்ல, மாறாக இதற்குப் படைத்தவன் ஒருவன் உள்ளான். அவனே மகத்தான அல்லாஹ், அவனே வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தை ஆளும் நுணுக்கமான விதிகளை அமைத்தவன். இந்நூல் அல்லாஹ்வின் பண்புகளை விளக்கி, தூதர்களையும், இறைவேதங்களையும் விசுவாசிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மேலும், இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் எனக் கூறி, இறையச்சத்துடன் வாழ்வதன் மூலம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உண்மையான மகிழ்ச்சியை அடைய அழைக்கிறது.
இந்நூல் ஒரு முஸ்லிம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைக் கொள்கைகளான, அல்லாஹ்வை அறிந்துகொள்ளுதல், இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துகொள்ளுதல், மற்றும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை அறிந்துகொள்ளுதல் ஆகியவற்றை விளக்குகிறது. மேலும், குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் ஈமானையும் நற்செயல்களையும் கட்டியெழுப்புவதில் இந்த அடிப்படைகளின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) எப்போதாவது நீ உன்னையே இந்த வானங்களையும் பூமியையும் அதிலுள்ள பிரமாண்டமான படைப்புக்களையும் படைத்தவன் யார்? இப்பிரபஞ்சத்தின் மிகத்துல்லியமானதும் கட்சிதமானதுமான இந்த ஒழுங்கை அமைத்தவன் யார் என்ற கேள்வியை கேட்டதுண்டா?