உள்ஹிய்யா மற்றும் அறுப்பு தொடர்பான சட்டங்கள் என்ற நூலின் சுருக்கம்
மூல நூல் ஆசிரியர்: பேரறிஞர் அஷ்ஷேக் அல்லாஹ் அவரதும், அவரது பெற்றோரினதும், அனைத்து முஸ்லிம்களினதும் பாவங்களை மன்னிப்பானாக! அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கின்றேன்) முன்னுரை புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, அவனைப் போற்றி, அவனிடமே உதவியும் தேடுகிறோம், அவனிடமே பாவமன்னிப்புக்கோரி மீளுகிறோம், எமது உள்ளங்கள் மற்றும் செயற்களின் தீங்குகளிலிருந்து அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை, யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விடுகிறானோ அவரை நல்வழிப்படுத்துபவர் யாருமில்லை. உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன்…
These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.
உள்ஹிய்யா மற்றும் அறுப்பு தொடர்பான சட்டங்கள் என்ற நூலின் சுருக்கம்
மூல நூல் ஆசிரியர்: பேரறிஞர் அஷ்ஷேக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்)
அல்லாஹ் அவரதும், அவரது பெற்றோரினதும், அனைத்து முஸ்லிம்களினதும் பாவங்களை மன்னிப்பானாக!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கின்றேன்)
முன்னுரை
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, அவனைப் போற்றி, அவனிடமே உதவியும் தேடுகிறோம், அவனிடமே பாவமன்னிப்புக்கோரி மீளுகிறோம், எமது உள்ளங்கள் மற்றும் செயற்களின் தீங்குகளிலிருந்து அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை, யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விடுகிறானோ அவரை நல்வழிப்படுத்துபவர் யாருமில்லை. உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை, அவனுக்கு எந்த இணையாளனுமில்லை, மேலும், முஹம்மது அவனது அடியாரும் தூதருமாவார், அவருக்கு மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் அவர்களை நன்றியுடன் பின்பற்றுவோருக்கும் அதிகமான சமாதானமும் ஆசீர்வாதமும் உண்டாகட்டும்.
நான் உள்ஹிய்யா மற்றும் அறுப்பு தொடர்பான சட்டங்கள் பற்றி (93) பக்கங்களில் ஒரு நூலை எழுதியிருந்தேன். அதில் உள்ள சில கருத்துவேறுபாடுகள் மற்றும் நீண்ட விவாதங்கள் வாசகர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால், தேவையற்றவற்றை நீக்கி, தேவையான மேலும் சிலவற்றை சேர்த்து, அந்த நூலை சுருக்க முடிவு செய்தேன். [1] ரஜப் மாதம், ஹிஜ்ரி 1396 ம் வருடம் அது பிரசுரிக்கப்பட்டது.
எமது அனைத்து பணிகளையும் அல்லாஹ்வுக்கே அர்ப்பணிக்கப்பட்ட தூய பணியாகவும், அவனுடைய சட்டங்களை விளக்குவதாகவும், நமக்கும் முஸ்லிம்களுக்கும் பயனளிப்பதாகவும் அமைக்க வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். நிச்சயமாக அவன் மாபெரும் கொடையாளன், தயாளன்.
இந்த சுருக்கம் பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது:
பகுதி ஒன்று: உழ்ஹிய்யா என்பதன் வரையறையும் அதன் சட்டநிலையும்.
பகுதி இரண்டு : உழ்ஹிய்யாவின் நிபந்தனைகள்
பகுதி மூன்று: உழ்ஹிய்யா கொடுக்கப்படும் சிறந்த பிராணி, இனம் மற்றும், தன்மை பற்றியதும் மற்றும், அவற்றில் வெறுக்கப்பட்டவை பற்றியதும்.
பகுதி நான்கு : யாருக்காக உழ்ஹிய்யா நிறைவேறும் என்பது பற்றியது.
பகுதி ஐந்து : உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணி பற்றியதும், அதன் சட்டங்கள் பற்றியதும்.
பகுதி ஆறு : உழ்ஹிய்யாவில் சாப்பிடமுடியுமான அளவும், பகிரப்படும் அளவும்
பிரிவு ஏழு : உழ்ஹிய்யா கொடுக்க விரும்புவோர் தவிர்க்க வேண்டியவை.
பிரிவு எட்டு: அறுத்தல் மற்றும் அதன் நிபந்தனைகள்.
பகுதி ஒன்பது: அறுத்தலின் ஒழுங்குகள்.
பகுதி பத்து: அறுத்தலில் விரும்பத்தகாதவை.
ஆசிரியர்
பகுதி ஒன்று
உழ்ஹிய்யாவின் வரையறை மற்றும் அதன் சட்டம்
உழ்ஹிய்யா என்பது, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில், பெருநாளை முன்னிட்டு, ஹஜ்ஜுப் பெருநாட் தினங்களில் அறுக்கப்படும் கால்நடைகள் ஆகும்.
இது, அல்லாஹ்வின் வேதம், நபியவர்களின் ஸுன்னா, மற்றும் முஸ்லிம்களின் இஜ்மா (ஒருமித்த கருத்து) ஆகியவற்றின் ஊடாக வழிகாட்டப்பட்ட இஸ்லாத்தின் சின்னங்களில் ஒன்றாகும்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : “ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!” (அல் கவ்ஸர்: 2) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் தொழுகையும், எனது குர்பானியும் (அறுத்துப் பலியிடல்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை.” அவனுக்கு இணை அறவே இல்லை; இ(ந்த தூய்மையான ஏகத்துவத்)தைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்) நான் முதலாமவன்.” (அல்அன்ஆம் : 162, 163) நுஸுக் என்பது, சயீத் இப்னு ஜுபைர் அவர்கள் கூறியது போன்று, அறுத்துப் பலியிடல் ஆகும். [2], உழ்ஹிய்யா உட்பட, அனைத்து வணக்கங்களும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இது மிகவும் பரந்த கருத்தாகும். அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (அல் ஹஜ் : 34) (2) ஆதாரம் : தஃப்ஸீர் அப்துர் ரஸ்ஸாக் 1/223, தஃப்ஸீர் இப்னு ஜரீர் 10/47.
புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியவற்றில் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : நபி (ஸல்) அவர்கள் இரண்டு வெள்ளை நிறமான, கொம்புள்ள செம்மறி ஆடுகளை தமக்காக அறுத்தார்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி, தக்பீர் கூறி, அவற்றின் (கழுத்துப்) பக்கங்களில் தமது கால்களை வைத்து அறுத்தார்கள். (3) (3) ஆதாரம் : புஹாரி, பாடம் : உல்ஹியா, தலைப்பு : அறுக்கும் போது தக்பீர் கூறல், ஹதீஸ் எண் 5565, முஸ்லிம், பாடம் : உல்ஹியா, தலைப்பு : உழ்ஹிய்யா பிராணி அழகாக இருப்பது விரும்பத்தக்கதாகும், ஹதீஸ் எண் 1966.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் பத்து வருடங்கள் தங்கி இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் உழ்ஹியா (குர்பானி) கொடுத்தார்கள். ஆதாரம் : அஹ்மத், திர்மிதி, மேலும் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸ், ஹஸன் தரத்திலானது எனத் தீர்ப்பளித்துள்ளார்[4]. (4) திர்மிதி அவர்கள் உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், உழ்ஹிய்யா ஒரு ஸுன்னா என்பதற்கான ஆதாரம் என்ற தலைப்பில் ஹதீஸ் எண் 1507 லும், அஹ்மத் பாகம் 2 பக்கம் 38 லும் பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்களுக்கு உழ்ஹிய்யா பிராணிகளைப் பகிர்ந்தார்கள். அதில் உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு ஜதஆ (ஒரு வருடம் பூர்த்தியான ஆடு) கிடைத்தது. அதற்கு அவர்கள், ‘யா ரஸூலல்லாஹ், எனக்கு ஜதஆ கிடைத்தது’ என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: அதை (அந்த ஆட்டை) பலியிடுங்கள்" என்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)(5) (5) புஹாரியில் உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், , தலைவர் உழ்ஹிய்யா பிராணிகளை மக்களுக்கு மத்தியில் பகிர்தல் எனும் தலைப்பில், ஹதீஸ் எண் 5547 லும், முஸ்லிமில், உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், , உழ்ஹிய்யா பிராணிகளின் வயதெல்லை எனும் தலைப்பில்,, ஹதீஸ் எண் 1965 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யார் தொழுகைக்குப் பிறகு அறுத்துப் பலியிடுகிறாரோ, அவருடைய பலியிடல் நிறைவடைந்தது, மேலும் அவர் முஸ்லிம்களின் சுன்னத்தை பின்பற்றியவராவார்". ஆதாரம் : புஹாரி, முஸ்லிம் (6) (6) புஹாரியில் உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், , உழ்ஹிய்யாவின் ஸுன்னா எனும் தலைப்பில், ஹதீஸ் எண் 5546 லும், முஸ்லிமில், உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், அதன் நேரம் எனும் தலைப்பில், ஹதீஸ் எண் 1961 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யா கொடுத்தார்கள். அவர்களது தோழர்களும் உழ்ஹிய்யா கொடுத்தார்கள். மேலும், உழ்ஹிய்யா என்பது முஸ்லிம்களின் சுன்னா, அதாவது அவர்களின் வழிமுறை என்றும் அறிவித்தார்கள். இதனால், பல அறிஞர்கள் கூறியுள்ளது போன்று, முஸ்லிம்கள் அனைவரும் இது மார்க்கத்தில் உள்ள ஒன்று என ஏகோபித்து ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அது வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவா? அல்லது அதை விட்டுவிட முடியாத கட்டாயமானதா? என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபட்டனர். மார்க்க மேதைகளில் பெரும்பான்மையினர் இது வலியுறுத்தப்பட்ட ஸுன்னா எனக் கூறியுள்ளனர். இது ஷாஃபிஈ இமாமின் மத்ஹபாக இருப்பதுடன், மாலிக் மற்றும் அஹ்மத் ஆகியோரைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ள பிரபலமான கருத்துமாகும். (7) திர்தீர் அவர்களின் அஷ்ஷர்ஹ் அஸ்ஸகீர் (2/137), நிஹாயத்துல் மிஹ்தாஜ் (8/2), அல் இன்ஸாஃப் (9/419).
மற்ற சிலர் இதை கடமையாகக் கருதுகின்றனர். இது இமாம் அபூஹனிஃபா (ரஹிமஹுமல்லாஹ்) அவர்களின் மத்ஹப் நிலைப்பாடாகும். மேலும், இமாம் அஹ்மத் அவர்களின் இரு கருத்துக்களில் ஒன்றாகும்.(8) இதையே ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களும் தெரிவாகக் கொண்டுள்ளார். மேலும், இது இமாம் மாலிக் அவர்களின் மத்ஹபில் உள்ள இரண்டு கருத்துக்களில் ஒன்றாகவோ அல்லது பரவலான கருத்தாகவோ உள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.(9) (8) அத் துர் முக்தார் (பாகம் 5 பக்கம் 199), அல் இன்ஸாஃப் (பாகம் 9 பக்கம் 419) (9) இரு தரப்பினரின் ஆதாரங்களையும் வாதப் பிரதிவாதங்களையும் மூல நூலில் காண்க, பக்கம் (7-15). [ஆசிரியர்] இப்னு தைமியாவின் கருத்தினை, «மஜ்மூஉல் ஃபதாவா» (23/162-163) நூலில் காண்க.
உழ்ஹிய்யா பிராணியை அறுப்பது அதன் விலையை தர்மமாக வழங்குவதைக் விடச் சிறந்ததாகும்; ஏனெனில் அதுவே நபி (ஸல்) அவர்களினதும், அவர்களுடன் இருந்த முஸ்லிம்களினதும் செயலாகும். மேலும், அறுத்தல் என்பது, அல்லாஹ்வின் சின்னங்களில் ஒன்றாகும். மக்கள் அதனை விட்டு, விலையை தர்மமாக வழங்கத் தொடங்கினால், அந்த சின்னம் மறைந்து விடும். உழ்ஹிய்யா பிராணியை அறுப்பதை விட அதன் விலையை தர்மமாக வழங்குவது சிறந்ததாக இருந்தால், நபி (ஸல்) அவர்கள் தமது சொற்கள், அல்லது செயல்கள் மூலம் அதைத் தமது உம்மத்திற்கு விளக்கி இருப்பார்கள்; ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்திற்கு நன்மையை விளக்காமல் விடமாட்டார்கள். மேலும், தர்மம் உழ்ஹிய்யாவிற்கு சமமாக இருந்தால் கூட, அதையும் விளக்கி இருப்பார்கள்; ஏனெனில் அது உழ்ஹிய்யாவின் சிரமத்தை விட எளிதானது, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், சிரமமான ஒன்றுக்கு நிகராக, இலகுவான ஒன்று இருக்கும் போது அதனை உம்மத்திற்கு விளக்காமல் விடமாட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டார்கள், அப்போது நபியவர்கள், «உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுத்தால், மூன்றாவது நாளுக்குப் பிறகு அவரது வீட்டில் எதுவும் இருக்கக் கூடாது». என்று கூறினார்கள். அடுத்த ஆண்டில் நபித்தோழர்கள், “அல்லாஹ்வுடைய தூதரே! கடந்த ஆண்டில் செய்ததைப் போலவே செய்யவேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: “நீங்கள் உணவுண்டு, பிறருக்கும் கொடுத்து, சேமித்தும் வையுங்கள்; ஏனெனில் அந்த ஆண்டு மக்கள் கஷ்டத்தில் இருந்தார்கள், அதில் நீங்கள் உதவ வேண்டும் என்று நான் விரும்பினேன்” என்று கூறினார்கள். இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர்[10]. (10) புஹாரியில் உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், , உழ்ஹிய்யாவின் இறைச்சிகளில் சாப்பிட முடியுமான அளவு எனும் தலைப்பில், ஹதீஸ் எண் 5569 லும், முஸ்லிமில், உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், மூன்று நாட்களுக்குப் பின்னர் உழ்ஹிய்யாவின் இறைச்சிகளில் சாப்பிடுவது தடுக்கட்டுள்ளமை பற்றிய தெளிவு எனும் தலைப்பில், ஹதீஸ் எண் 1974 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : உரிய சந்தர்ப்பத்தில் அறுப்பது, அதன் விலையை ஸதகா செய்வதை விட சிறந்ததாகும். இதனால் தான், தமத்துஃ, மற்றும் கிரான் முறையிலான ஹஜ் வணக்கத்தில் கடமையாகும் குர்பானிக்குப் பதிலாக, அதன் பல மடங்கு பெறுமதியான விலையைக் கொடுத்தாலும், அதற்கு நிகராக வரமாட்டாது. குர்பானியும் அதுபோன்றதே. அவர்களது கருத்து நிறைவுபெற்றுவிட்டது (11). [11] 'துஹ்பதுல் மவ்தூத் பி அஹ்காமில் மவ்லூத்', பக்(112) ஹிலாலி என்பவரின் நூலாய்வுடன் அச்சிடப்பட்டுள்ளது.
***
பிரிவு
உழ்ஹிய்யா என்பது, உயிருள்ளவர்கள் மீது கடமையானது என்பதே அடிப்படையாகும். ரஸூல் (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் உழ்ஹிய்யா கொடுப்பார்கள். ஆனால் சில பொதுமக்கள், உழ்ஹிய்யா என்பது இறந்தவர்களுக்காகவே என்று நினைப்பது அடிப்படையற்றது.
மரணித்தவர்களுக்கான உழ்ஹிய்யா கொடுப்பது மூன்று வகைப்படும் :
முதலாவது: உயிருள்ளவர்களுடன் இணைத்து மரணித்தவர்களுக்காகவும் உழ்ஹிய்யா கொடுத்தல், உதாரணமாக: ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்தாருக்காகவும் உழ்ஹிய்யா கொடுப்பதாக நிய்யத் வைத்து, அதில் உயிருள்ளவர்கள், இறந்தவர்கள் அனைவரையும் நாடுதல். இதற்கான ஆதாரம், நபி (ஸல்) அவர்களும் தமக்காகவும் தமது குடும்பத்தாருக்காகவும் உழ்ஹிய்யா கொடுத்தமையாகும்.(12) அவர்களில் சிலர் முன்பே இறந்திருந்தனர். (12) முஸ்லிமில், உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், உழ்ஹிய்யா பிராணி அழகாக இருப்பது விரும்பத்தக்கது என்ற தலைப்பில் ஹதீஸ் எண் 1967 ல் ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது: இறந்தவர்களின் வஸிய்யத் அடிப்படையில், அவர்களுக்காக குர்பானி கொடுத்தல். இதற்கான ஆதாரம், பின்வரும் இறைவசனம் ஆகும் : ஆக, எவர் (மரண சாசனம் கூறுபவரிடமிருந்து) அ(வரது மரண சாசனத்)தை செவியுற்றதற்குப் பின்னர், அதை மாற்றுவாரோ அதன் பாவமெல்லாம் மாற்றுகிறவர்கள் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான். (அல்பகரா : 181)
மூன்றாவது: உயிருள்ளவர்கள் அல்லாமல், தனியாக மரணித்தோருக்காக மாத்திரம் தர்மமாக உழ்ஹிய்யா கொடுப்பது. இது அனுமதிக்கப்பட்டதாகும். ஹனபி மத்ஹப் அறிஞர்கள், அதனை அவர்களுக்காக செய்யப்படும் ஸதகாவுடன் ஒப்பிட்டு, நன்மை மரணித்தோருக்கு சேரும் என்றும், அவர்கள் இதனால் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர் (13) [13] அல்முக்னிஃ மற்றும் அஷ்ஷரஹுல் கபீர் எனும் நூல்களுடன் சேர்ந்து அச்சிடப்பட்டுள்ள அல்இந்ஸாஃப் (6/ 261).
ஆனால் இறந்தவருக்காகவென்று உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னா அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்; ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தம் இறந்தவர்களுக்காக தனிப்பட்ட முறையில் உழ்ஹிய்யா கொடுக்கவில்லை. அவரின் மிகவும் அன்பான உறவினரான தன் சிறிய தந்தை ஹம்ஸா (ரழி) அவர்களுக்காகவும், தம் வாழ்நாளில் இறந்த மூன்று திருமணமான மகள்களுக்கும், மூன்று சிறிய மகன்களுக்கும், தம் மிகவும் அன்பான மனைவியான கதீஜா (ரழி) அவர்களுக்காகவும் உழ்ஹிய்யா கொடுக்கவில்லை. மேலும், அவர்களின் காலத்தில் அவர்களது தோழர்களில் யாரும் தம் இறந்தவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுத்ததாக வரலாறு இல்லை, அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.
ஒருவர் இறந்த முதல் ஆண்டில் அவருக்காக 'மண்ணறை உழ்ஹிய்யா' என்று கூறிக்கொண்டு, சிலர் கொடுக்கும் உழ்ஹிய்யாவும் தவறானது என நாம் கருதுகின்றோம். இதன் நன்மையுடன் வேறு யாரையும் இணைத்துக் கொள்ளக்கூடாது என நம்புகின்றனர். அல்லது தமது இறந்தவர்களுக்காக தானமாகவோ, அல்லது அவர்களின் வஸிய்யத் படியோ பலியிடுகின்றனர், ஆனால் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் பலியிடுவதில்லை. ஒருவர் தமது சொத்திலிருந்து தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் பலியிட்டால், அது அவர்களில் உயிரோடுள்ளவர்களையும் இறந்தவர்களையும் உள்ளடக்கிக்கொள்ளும் என்பதை அறிந்திருந்தால், அவர்கள் இந்த தவறான செயலை விட்டு விலகியிருப்பார்கள்.
***
பகுதி இரண்டு
உழ்ஹிய்யாவின் நிபந்தனைகள்
உழ்ஹிய்யாவிற்கு ஆறு நிபந்தனைகள் உள்ளன :
ஒன்று: அது கால்நடைகளில் ஒன்றாக இருக்க வேண்டும், அதாவது: ஒட்டகம், மாடு, ஆடு - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு -. அல்லாஹ் கூறுகின்றான்: (உங்களுக்கு முன்சென்ற நம்பிக்கை கொண்ட) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிராணியை (அல்லாஹ்விற்காக அறுத்து) பலியிடுவதை (வணக்கமாக) நாம் ஆக்கி இருக்கிறோம். அல்லாஹ், அவர்களுக்குக் கொடுத்த கால்நடைகள் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயரை அவர்கள் நினைவு கூர்வதற்காக (கால் நடைகளை பலியிடுவதை ஏற்படுத்தினோம்). (அல் ஹஜ் : 34) கால்நடைகள் என்பவை: ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவையாகும். இது தான்அரபுகளிடத்தில் பரவலாக அறியப்பட்டதாகும், இதை ஹஸன், கதாதா மற்றும் பலர் கூறியுள்ளனர் [14]. (14) ஆதாரம் : தபரியின் தஃப்ஸீர் (8/ 12).
இரண்டாவது நிபந்தனை : மார்க்க ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட வயதை அடைய வேண்டும், அதாவது ஆடுகள் ஜதஆ பருவத்தை அடைந்ததாகவும், ஏனையவை ‘ஸனிய்யா’ பருவத்தை அடைந்ததாகவோ இருக்க வேண்டும்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் முஸின்னாவையே அறுத்துப் பலியிடுங்கள். ஆனால், அதைப் பெற்றுக்கொள்வது உங்களுக்கு சிரமமானால், செம்மறியாட்டில், ‘ஜதஆ’ வை அறுத்துப் பலியிடுங்கள்.” (ஆதாரம் : முஸ்லிம்[15]). (15) முஸ்லிமில், கிதாபுல் அழாஹி, உழ்ஹிய்யாவின் வயது பற்றிய தலைப்பில், ஹதீஸ் எண் 1963 ல் ஜாபிர் (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸின்னா என்பது: ஸநியா மற்றும் அதை விட வயதில் கூடியதாகும். ஜதஆ என்பது: அதை விட வயதில் குறைந்ததாகும். ஒட்டகங்களில் ஸனிய் என்பது, ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததாகும். மாடுகளில் ஸனிய் என்பது, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆடுகளில் ஸனிய் என்பது, ஒரு ஆண்டு நிறைவடைந்தது. ஜதஆ என்பது: அரை ஆண்டு நிறைவடைந்தது. எனவே, ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றில் ஸனிய் அளவிற்கு கீழே உள்ளவற்றை உழ்ஹிய்யா கொடுக்க முடியாது, மற்றும் செம்மறியாட்டில் ஜதஆ அளவிற்கு கீழே உள்ளவற்றை உழ்ஹிய்யா கொடுக்க முடியாது.
மூன்றாவது நிபந்தனை : நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கும் குறைபாடுகளிலிருந்து நீங்கியதாக அவை இருக்க வேண்டும். அவை நான்காகும் :
1. தெளிவான, ஒற்றைக் கண் குருடானது. அதாவது, கண் பார்வை தொலைந்தது, அல்லது அக்கண் வெளியே வந்து, ஒரு பொத்தானைப் போன்று இருக்கும். அல்லது ஒற்றைக்கண் குருடு என்பதைத் தெளிவாகக் காட்டும் விதமாக, கடும் வெண்மையை அடைந்திருக்கும்.
2- தெளிவான நோய் உள்ளது: அதாவது, அதன் அறிகுறிகள் மிருகத்தின் மீது தெளிவாகத் தோன்றும். மேய்ச்சலுக்குச் செல்ல முடியாத அளவுக்கும், உணவில் விருப்பமின்மையை ஏற்படுத்தும் அளவுக்கும் காய்ச்சல் ஏற்படல். அதன் இறைச்சியை பழுதடையச் செய்யும் வெளிப்படையான தோல் நோய் அல்லது அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆழமான காயம் போன்றவை.
3- தெளிவான நொண்டி நிலை: அதாவது, நோயற்ற மிருகங்களுடன் இணைந்து சமமாக நடப்பதற்குத் தடையாக இருக்கும் நொண்டி நிலை.
4- எலும்பு மச்சையை நீக்கும் அளவு மெலிவடைந்திருத்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம், உழ்ஹிய்யாவில் தவிர்க்கவேண்டியவை எவை? எனக் கேட்கப்பட்ட போது, தமது கையினால் சைகை செய்து பின்வருமாறு கூறினார்கள்: "நான்கு வகைகள்: தெளிவாக நொண்டித் தன்மை கொண்டது, தெளிவாக ஒற்றைக் கண் குருடானது, தெளிவாக நோயுற்றது, எலும்புமச்சை இல்லாத அளவு மெலிவடைந்தது." இது மாலிக் அவர்களால் «முவத்தா»வில் அல் பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது [16]. (16) ஆதாரம் : மாலிக், உழ்ஹிய்யா பற்றிய பாடம், உழ்ஹிய்யா கொடுக்கத் தடைசெய்யப்பட்டவை பற்றிய தலைப்பு, ஹதீஸ் எண் 1387.
ஸுனனில் உள்ள ஒரு அறிவிப்பில், பராஃ அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் எமக்கு முன்னால் எழுந்து நின்று இவ்வாறு கூறினார்கள் : "நான்கு வகையான மிருகங்களை உழ்ஹிய்யா கொடுக்க முடியாது" பின்பு ஏற்கனவே கூறியது போன்று கூறினார்கள் (17) (17) இதே வார்த்தையை, அபூதாவூத் தமது கிரந்தத்தில், "உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், உழ்ஹிய்யா கொடுக்க வெறுக்கப்பட்டவை என்ற தலைப்பில் ஹதீஸ் எண் 2802 இல் பதிவு செய்துள்ளார். நஸாஈ அவர்கள், தமது நூலில், உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில் "நொண்டிப் பிராணி" என்ற தலைப்பில் ஹதீஸ் எண் 4375 இலும், இப்னு மாஜா அவர்கள் தமது நூலில் உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், உழ்ஹிய்யா கொடுக்க வெறுக்கப்பட்டவை என்ற தலைப்பில் ஹதீஸ் எண் 3144 இலும், அஹ்மத் அவர்கள் தமது நூலில் (4/ 300) இலும் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு குறைபாடுகளைக் கொண்டிருக்கும் பிராணிகளைக் குர்பானி கொடுப்பது செல்லுபடியாகாது. மேலும் இவற்றிற்கு இணையான அல்லது இவற்றை விடக் கடுமையான குறைபாடுகளும் இவற்றுடன் சேர்க்கப்படுகின்றன, எனவே பின்வருவனவையும் குர்பானியாக நிறைவேறமாட்டாது:
1- தன் இரு கண்களாலும் பார்க்க முடியாத குருடான மிருகம்.
2- வயிறு ஊதிப் பெருகும் வரை உணவு உட்கொண்ட மிருகம், அது மலம் கழித்து, அதன் அபாயம் நீங்கும் வரை.
3. கன்று ஒன்றை சிரமத்துடன் பிரசவித்துக் கொண்ட பிராணி. அதன் ஆபத்து நீங்கும் வரை.
4. கழுத்து நெறிக்கப்படல், உயரமான இடத்திலிருந்து விழல் போன்ற, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்களால் பாதிக்கப்பட்டவை, அவற்றின் ஆபத்து நீங்கும் வரை.
5- சப்பானியான மிருகம். அதாவது, உடல் குறைபாடு காரணமாக நடக்க முடியாதவை.
6- கை அல்லது கால் ஒன்றை இழந்த மிருகம்.
முந்தைய நான்கு குறைகளுடன் இவற்றையும் இணைத்தால்; பலியிட முடியாதவை பத்து ஆகின்றன: அதாவது, இவை ஆறுடன், முந்தைய நான்கு குறைகளையும் கொண்டவை.
நான்காவது நிபந்தனை: பலியிடுபவர் அதனை சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். அல்லது மார்க்கத்தின் ஊடாகவோ, உரிமையாளர் ஊடாகவோ அனுமதி வழங்கப்பட்டவராக இருக்க வேண்டும்; எனவே, கொள்ளையடிக்கப்பட்டது, திருடப்பட்டது, பொய்யான வாதாட்டம் மூலம் பெறப்பட்டது போன்ற, அவருக்கு சொந்தமில்லாதவை செல்லுபடியாக மாட்டாது. ஏனெனில், அல்லாஹ்வுக்கு மாறு செய்வது கொண்டு அவனை நெருங்க முடியாது.
அனாதையின் செல்வத்திலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வழமையிருந்து, அவ்வாறு கொடுக்கா விட்டால் அவனது மனம் உடைந்துவிடும் என்றால், அநாதையின் பொறுப்பாளர் அந்த அதனைக் கொடுத்தால் செல்லுபடியாகும். பொறுப்புச் சாட்டியவரின் அனுமதியுடன் பொறுப்பாளி, அவனது செல்வத்திலிருந்து பலியிடுவது செல்லுபடியாகும்.
ஐந்தாவது நிபந்தனை: மற்றவரின் உரிமை அதனுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது, எனவே அடமானமாக வைக்கப்பட்டதை உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியாது. (18) [18] இந்த ஐந்து நிபந்தனைகள், குர்பானி மற்றும், ஹத்யு, அகீகா போன்ற அனைத்து அறுத்துப் பலியிடும் வழிபாடுகளுக்கும் பொருந்தும்.
ஆறாவது நிபந்தனை: மார்க்கத்தில் வரையறுக்கப்பட்ட நேரத்தில் அறுக்கப்படவேண்டும். அதாவது, நஹ்ர் தினமான, பெருநாள் தினத்தில், பெருநாள் தொழுகை தொடக்கம், அய்யாமுத் தஷ்ரீக்குடைய கடைசி நாளான துல்ஹஜ் மாதம் 13ம் நாளின் சூரிய அஸ்தமனம் வரையாகும். எனவே, உழ்ஹிய்யாவுடைய நாட்கள் நான்காகும். பெருநாள் தினம் தொழுகைக்குப் பிறகு, அதனைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்கள்.
பெருநாள் தொழுகை நிறைவடைய முன்னரோ, பதின்மூன்றாம் தினம் சூரியன் மறைந்த பின்னரோ யாராவது அறுத்துப் பலியிட்டால், அவரது உழ்ஹிய்யா நிறைவேற மாட்டாது. ஏனெனில், புஹாரியின் அறிவிப்பில், பராஉ பின் ஆஸிப் ரழி அவர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: “யாராவது தொழுகைக்கு முன்னர் அறுத்தால், அது அவர் தனது குடும்பத்திற்காக வழங்கிய இறைச்சி மட்டுமே தவிர, அது எந்த விதத்திலும் நுஸுக் (பலியிடுதல்) ஆகாது." (19) (19) புஹாரியில் உழ்ஹிய்யா என்ற பாடத்தில், உழ்ஹிய்யா எனும் ஸுன்னா எனும் தலைப்பில் ஹதீஸ் எண் 5545 இலும், முஸ்லிமில் உழ்ஹிய்யா என்ற பாடத்தில், அதனுடைய நேரம் என்ற தலைப்பில் ஹதீஸ் எண் 1961/7 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜுன்துப் இப்னு ஸுஃப்யான் அல் பஜலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : நபியவர்கள் பின்வருமாறு கூற நான் கேட்டுள்ளேன் : யார் தொழுகைக்கு முன் பலியிடுகிறாரோ; அவர் அதற்குப் பதிலாக மற்றொன்றைப் பலியிடட்டும்". (20) (20) ஆதாரம் : புஹாரி, உழ்ஹிய்யா பற்றிய பாடம், ‘யார் தொழுகைக்கு முன்னர் அறுக்கின்றாரோ அவர் மீண்டும் அறுக்கவேண்டும்’ என்ற தலைப்பு, ஹதீஸ் எண் (5562), முஸ்லிம், உழ்ஹிய்யா பற்றிய பாடம், ‘அதன் நேரம்’ பற்றிய தலைப்பு, ஹதீஸ் எண் (1960).
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக, நுபைஷா அல் ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தஷ்ரீக்குடைய நாட்கள் உண்ணவும், பருகவும், அல்லாஹ்வை நினைவு கூறவும் உரிய நாட்களாகும்.” (ஆதாரம் : முஸ்லிம்) (21) (21) முஸ்லிமில், நோன்பு பற்றிய பாடத்தில், தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 1141 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தஷ்ரீக்குடைய நாட்களை விட்டும் தாமதிக்க நியாயமான காரணம் ஏற்பட்டால், உதாரணமாக: அவனது அலட்சியமின்றி, பலியிட வேண்டிய பிராணி தப்பி ஓடி, அதனை நேரம் முடிந்த பின்பு மாத்திரமே கண்டெடுக்க முடியுமானால், அல்லது பலியிடுவதற்கு ஒருவரை நியமித்திருந்து, அந்த நியமிக்கப்பட்டவர் நேரம் முடியும் வரை மறந்து விட்டால், (இவ்வாறான சந்தர்ப்பங்களில்) நியாயமான காரணம் இருப்பதால், நேரம் முடிந்த பின்பு பலியிடுவதில் தவறில்லை. மேலும், ஒருவர் தூக்கத்தினாலோ, மறதியினாலோ தொழுகையைத் தவறவிட்டால், அவர் விழித்தவுடன் அல்லது நினைவுக்கு வந்தவுடன் தொழவேண்டும் என்பதோடு ஒப்பிட்டும் இதே சட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
உழ்ஹிய்யாவை இரவிலும், பகலிலும் பலியிடுவதற்கு அனுமதியுள்ளது. பகலில் பலியிடுவது சிறந்ததாகும். பெருநாளன்று இரு குத்பாக்களும் முடிந்த பின் பலியிடுவது மிகச்சிறந்ததாகும். ஒவ்வொரு நாளும் அதற்குப் பின் வரும் நாளைவிட சிறந்ததாகும். ஏனெனில் இது நன்மையைச் செய்வதில் முந்திக் கொள்வதாகும்.
* * *
பகுதி மூன்று
உழ்ஹிய்யாப் பிராணிகளில் மிகச் சிறந்த இனம், மற்றும் மிகச் சிறந்த தன்மை பற்றிய மற்றும், அவற்றில் வெறுக்கப்பட்டவை பற்றிய பாடம்.
பலியிடப்படும் பிராணிகளில் மிகச் சிறந்தது, ஒட்டகமாகும். பின்னர், முழுமையாக பலியிடப்படும் மாடாகும். பின்னர் செம்மறியாடாகும், பின்னர் ஆடாகும். பின்னர் ஒட்டகத்தின் ஏழில் ஒரு பங்காகும். பின்னர் மாட்டின் ஏழில் ஒரு பங்காகும் .
அவற்றின் தன்மைகளில் மிகச் சிறந்தது : அதிக மாமிசம் கொண்ட, கொழுத்த, உறுப்புக்கள் பரிபூரணமாக உள்ள, அழகான தோற்றம் கொண்ட பிராணியாகும்.
புஹாரியின் அறிவிப்பில், அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், வெள்ளை நிறமான, கொம்புகள் உடைய இரு செம்மறி ஆடுகளை உழ்ஹிய்யாவாகக் கொடுத்தார்கள் (22) இங்கு, கப்ஷ் என்பதன் மூலம் குறிக்கப்படுவது, பருமனான செம்மறியாடாகும். “அல் அம்லஹ்" என்பது வெண்மை நிறத்தில் கறுப்பு கலந்தது, அதாவது கறுப்பு நிறத்தில் வெண்மை நிறம் கொண்டது. (22) புஹாரியில் உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், விலங்கின் பக்கவாட்டில் கால் வைப்பது என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 5564 லும், முஸ்லிமில் உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், அழகான உழ்ஹிய்யாவைத் தேர்ந்தெடுப்பது என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 1966 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கருப்பு நிறம் கொண்ட, கொம்புகள் உள்ள ஆண் ஆட்டினை உழ்ஹிய்யா கொடுத்தார்கள். அது கறுப்புடன் உண்ணும், கறுப்புடனே பார்க்கும், கறுப்புடனே நடக்கும்.” இந்த ஹதீஸ், அபூ தாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா ஆகிய நான்கு கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் திர்மிதி இதனை ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் உள்ளது எனக் கூறியுள்ளார் [23]. அல்ஃபஹீல் : ஆண் ஒட்டகம். “அது கறுப்புடன் உண்ணும், கறுப்புடனே பார்க்கும், கறுப்புடனே நடக்கும்” என்பதன் அர்த்தம், அதன் வாய், கண்கள், மற்றும் உறுப்புக்களின் முடி கறுப்பாக இருக்கும் என்பதாகும். (23) அபூதாவூதில், உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், உழ்ஹிய்யாக்களில் விரும்பத்தக்கவை என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 2796 லும், திர்மிதியில், உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், உழ்ஹிய்யாக்களில் விரும்பத்தக்கவை என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 1496 லும், நஸாஈயில், உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், செம்மறி ஆடுகள் என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 4395 லும், இப்னு மாஜாவில், உழ்ஹிய்யாக்கள் என்ற பாடத்தில், உழ்ஹிய்யாக்களில் விரும்பத்தக்கவை என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 3128 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமை, அபூ ராபிஃ (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யா கொடுக்க நாடினால், இரண்டு பருமனான ஆடுகளை வாங்குவார்கள்.” இன்னொரு அறிவிப்பில்: “ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட” என்று வந்துள்ளது. ஆதாரம் : அஹ்மத் (24). கொழுத்த: அதிக கொழுப்பும் மாமிசமும் கொண்ட. அல் மௌஜூஉ என்பது : ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாகும். இது பொதுவாக இறைச்சி நல்லதாக இருப்பதில் கிடாய் ஆண் ஆடை விட முழுமையானது, ஆனால் முழுமையான உருவமைப்பிலும் உறுப்புகளிலும் பஹ்ல் அதைவிட முழுமையானது. (24) இமாம் அஹ்மதின் "அல் முஸ்னத்" (6/ 391). "மௌஜூஐன்" என்ற வார்த்தை இப்னு மாஜாவில், உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உழ்ஹிய்யாக்கள்" என்ற தலைப்பில், இல. 3122 இலும், அஹ்மதில் (6/ 220) அபூ ராஃபிஉ (ரழி) அவர்கள் அல்லாத வேறொருவரின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே உள்ஹிய்யாவின் வகையிலும், தன்மையிலும் மிகச் சிறந்தது.
அவற்றுள் வெறுக்கப்பட்டவை :
1. 'அல் அத்பா' : அதாவது, அதன் காதில் அல்லது கொம்பில் பாதி அல்லது அதற்கு மேல் வெட்டப்பட்டிருப்பது.
2. அல் முகாபலா: அதாவது முன்புறம் இருந்து அகலப் பக்கமாக காது கிழிக்கப்பட்ட மிருகம்.
3.அல்முதாபரா: அதாவது பின்புறம் இருந்து அகலப் பக்கமாக காது கிழிக்கப்பட்ட மிருகம்.
4. அஷ்ஷர்கா : அதாவது அதன் காது நீளமாக கிழிக்கப்பட்டது.
5- 'அல்-கர்கா', அதாவது: காது துளையிடப்பட்டது.
6. அல்முஸ்ஃபர்ரா : அதாவது, அதன் காது வெட்டப்பட்டு, காது சோனைகள் தென்படல். அல்லது, மிகவும் ஒல்லியானது, ஆனால் எலும்பு மச்சையை இழக்கும் அளவிற்கு சென்றிருக்கமாட்டாது என்றும் கூறப்படுகிறது.
7. முஸ்தஃஸலா : அதாவது முழு கொம்பும் அழிந்துவிட்டது.
8- அல்-பஃகா, அதாவது: கண் துளையிடப்பட்டு, பார்வை இழந்துவிட்டது. ஆனால் கண் அதே நிலையில் இருக்கும்.
9- அல்முஷய்யஆ : அதாவது பலவீனத்தின் காரணமாக, இன்னொருவர் வழிநடத்தினாலே தவிர, தன் மந்தையைப் பின்பற்றிச் செல்லாதது. எனவே, ஒருவர் அதனைத் தள்ளிச் சென்று அவற்றுடன் சேர்த்துவிட வேண்டியிருக்கும். அல்முஷய்யிஆ (வழியனுப்பி வைக்கும் பிராணி) என்றும் கூறப்படும். அதாவது, தன்னுடைய பலவீனத்தால், மந்தையின் பின்னால் தாமதமாகச் செல்லும் மிருகம் என்றும் அர்த்தம் தரும். எனவே அவற்றை வழியனுப்பி வைக்கும் பிராணி போன்று இருக்கும்.
இவையே வெறுக்கத்தக்கவையாகும். இவ்வாறான குறைகள் உள்ளவற்றை உழ்ஹிய்யாக் கொடுப்பதைத் தடுத்தும், அல்லது இவற்றைத் தவிர்க்குமாறு ஏவியும் ஹதீஸ்கள் வந்துள்ளன. இந்த ஹதீஸ்களுக்கும், உழ்ஹிய்யாவின் மூன்றாவது நிபந்தனையில் ஏற்கனவே கூறப்பட்ட பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்களின் ஹதீஸுக்கும் மத்தியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் விதத்தில், மேற்குறிப்பிடப்பட்டைவை வெறுக்கத்தக்கவை என்ற கருத்து கூறப்பட்டது.
இந்த வெறுக்கப்பட்டவையுடன், இவை போன்றவையும் சேர்க்கப்படும். எனவே பின்வருவன போன்றவற்றையும் உழ்ஹிய்யாக் கொடுப்பது வெறுக்கப்படும் :
1. ஒட்டகங்கள், மாடுகள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றில் 'அல்பத்ரா' எனப்படும், பாதி வாலோ, அதற்கு அதிகமாகவோ வெட்டப்பட்டிருப்பது.
2- பிற்தட்டில் அரைவாசியைவிட குறைவாக வெட்டப்பட்டிருத்தல். அரைவாசி அல்லது அதைவிட அதிகமாக வெட்டப்பட்டிருந்தால், பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப் பிரகாரம், அது நிறைவேறமாட்டாது. ஆனால் பிறவியிலேயே பின்புறம் இல்லாதவையாக இருப்பதை உழ்ஹிய்யாக் கொடுப்பதில் தவறில்லை.
3- ஆணுறுப்பு வெட்டப்பட்டவை. .
4- அவற்றில் சில பற்கள் விழுந்திருத்தல். அவை முன்பற்களாகவும், கடைவாய்ப்பற்களாகவும் இருந்தாலும் சரியே. பிறப்பிலேயே அவை இல்லாமல் இருந்திருந்தால் அவை வெறுக்கப்படமாட்டாது.
5. மார்பக முலைக்காம்பு துண்டிக்கப்பட்ட பிராணிகள். அது இயற்கையாகவே இல்லாமல் போயிருந்தால், அது வெறுக்கப்படமாட்டாது. பால் சுரப்பது நின்றுவிட்டாலும், பால்மடி ஆரோக்கியமாக இருந்தால் அவற்றைக் குர்பான் கொடுப்பதிலும் தவறில்லை.
இந்த ஐந்து வெறுக்கத்தக்கவற்றை, முந்தைய ஒன்பதுடன் சேர்த்தால்; வெறுக்கத்தக்கவை பதினான்கு ஆகின்றன.
* * *
பகுதி நான்கு
உழ்ஹிய்யா யாருக்காக நிறைவேறும்?
உழ்ஹிய்யாவாகக் கொடுக்கப்படும் ஒரே ஆடானது ஒரு மனிதனுக்கும், அவனது குடும்பத்தினருக்கும், மற்றும் அவன் விரும்பும் முஸ்லிம்களுக்கும் போதுமானதாகும்; ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: கருப்பு நிறத்திலேயே நடக்கும், கருப்பு நிறத்திலேயே அமரும், கருப்பு நிறத்தில் பார்க்கும், கொம்புள்ள செம்மறி ஆடொன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார். அது அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது, ஆஇஷா (ரழி) அவர்களிடம், “ஆஇஷாவே , கத்தியைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். (அதாவது: கத்தியை என்னிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறு அவர்கள் கொண்டு வந்ததும், அதனை எடுத்தார்கள். பின்பு செம்மறி ஆட்டைப் பிடித்து, அதனை நிலத்தில் சாயவைத்து, அதனை அறுக்கத் தயாராகிக் கொண்டு, 'பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின்' என்று கூறிவிட்டு அறுத்தார்கள். (பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அறுக்கின்றேன். யா அல்லாஹ்! முஹம்மதிடம் இருந்தும், முஹம்மதின் குடும்பத்திடம் இருந்தும், முஹம்மத்தின் உம்மத்திடம் இருந்தும் ஏற்றுக்கொள்வாயாக) (ஆதாரம் : முஸ்லிம்[25]). அடைப்புக்குள் காணப்படுவது விளக்கம் ஆகும். அது ஹதீஸின் வார்த்தை அல்ல. (25) முஸ்லிமில் உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், அழகான உழ்ஹிய்யாவைத் தேர்ந்தெடுப்பது என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 1967 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூ ராஃபிஉ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு செம்மறி ஆடுகளை உழ்ஹிய்யா கொடுப்பார்கள். அவற்றில் ஒன்று அவருக்காகவும் அவருடைய குடும்பத்தாருக்காகவும்; மற்றொன்று அவருடைய முழு சமுதாயத்திற்காகவும் கொடுப்பார்கள்.” ஆதாரம் : அஹ்மத் [26]. (26) இமாம் அஹ்மத் தனது «முஸ்னத்» (6/ 391) நூலில் இதனைப் பதிவு செய்துள்ளார்கள். .
அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தனக்காகவும், தனது குடும்பத்தாருக்காகவும் ஒரு ஆட்டை கொடுப்பதோடு, (அதிலிருந்து) அவர்களும் சாப்பிட்டு, பிறருக்கும் உணவளிப்பார்கள். ஆதாரம் : இப்னு மாஜா மற்றும் திர்மிதி, திர்மிதி அவர்கள் இது ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்கள்[27]. (27) இந்த ஹதீஸை திர்மிதி, உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், 'ஒரு ஆடு ஒரு குடும்பத்தாருக்காக போதுமானது' என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 1505 லும், இப்னு மாஜா அவர்கள் உழ்ஹிய்யா பற்றிய பாடத்தில், 'ஒரு ஆட்டைத் தனது குடும்பத்தாருக்காக கொடுத்தவர்' என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 3147 லும் பதிவு செய்துள்ளனர்.
ஒரு மனிதன் தனக்காகவும், தன் குடும்பத்தாருக்காகவும் ஒரு செம்மறி ஆட்டை அல்லது சாதாரண ஆட்டை உழ்ஹிய்யா கொடுத்தால், அது அவனுக்காகவும், அவன் நாடிய தனது குடும்பத்தவர்களில் உயிருள்ள, மரணித்த அனைவருக்கும் போதுமானதாக அமையும். அவர் பொதுவாகவோ, குறிப்பாகவோ எதையும் நினைக்காவிட்டால், மொழி அடிப்படையிலும், வழக்காறு அடிப்படையிலும் அச்சொல்லின் பொருளில் உள்ளடங்கும் அனைவருக்கும் நிறைவேறும். வழக்காறில், அவரது செலவினத்துக்கு உட்படும் மனைவிகள், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைவரையும் உள்ளடங்குவர். மொழியில்: அவருடைய சந்ததியிலும், அவருடைய தந்தையின் சந்ததியிலும், அவருடைய பாட்டனின் சந்ததியிலும், அவருடைய முப்பாட்டனின் சந்ததியிலும் உள்ள அனைத்து நெருங்கியவர்களையும் உள்ளடக்கும்.
ஒரு ஆடு யாருக்கெல்லாம் போதுமாகுமோ, அவர்களுக்கு ஒரு ஒட்டகத்தின் ஏழில் ஒரு பங்கு அல்லது ஒரு மாட்டின் ஏழில் ஒரு பங்கு ஆகியவையும் போதுமாகும். எனவே ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் ஒரு ஒட்டகத்தின் ஏழில் ஒரு பங்கு அல்லது ஒரு மாட்டின் ஏழில் ஒரு பங்கு உழ்ஹிய்யா கொடுத்தால் அது போதுமானதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தின் ஏழில் ஒரு பங்கையும் மாட்டின் ஏழில் ஒரு பங்கையும் ஹஜ்ஜில் பலியிடப்படும் ஆட்டுக்குப் பதிலாகக் கருதினார்கள். அதேபோல உழ்ஹிய்யாவிலும் அது பொருந்தும்; ஏனெனில் இவ்விரண்டிற்கும் இடையில் வேறுபாடு இல்லை.
ஒரு ஆட்டினை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வாங்கி, உழ்ஹிய்யாக் கொடுக்கமுடியாது. ஏனெனில் இது குர்ஆன் மற்றும் ஹதீஸில் வரவில்லை. அதேபோல் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு ஒட்டகம் அல்லது மாட்டில் பங்குகொள்ளமுடியாது; ஏனெனில் வழிபாடுகள் நிர்ணயிக்கப்பட்டவை. அவற்றின் அளவிலும் முறையிலும் வரையறையைத் தாண்ட முடியாது. ஆனால் நன்மையில் பங்குசேர்ப்பது இதற்கு விதிவிலக்காகும். அதில், முன்னர் குறிப்பிட்டது போன்று, வரம்பின்றி பங்கு சேரலாம்.
இதன்படி, உதாரணமாக, ஒரு சிலருடைய வஸிய்யத் இருக்கின்றது. அவர்களில் ஒவ்வொருவரும் தம்முடைய வக்ஃபின் வருவாயில் இருந்து உழ்ஹிய்யா கொடுக்குமாறு வஸிய்யத் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரது தனித்தனி வருவாயில் இருந்தும் உழ்ஹிய்யா கொடுக்க வருவாய் போதுமாய் இல்லை. இப்போது, இந்த வஸிய்யத்களை ஒன்று சேர்த்து, ஒரே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியாது. ஏனெனில், ஒரே ஆடு இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளோருக்கு, நன்மையிலேயே தவிர, உழ்ஹிய்யா வணக்கமாக நிறைவேறாது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே, உழ்ஹிய்யாவின் பெறுமதியை அடையும் வரை, அந்த ஒவ்வொரு வருவாயும் சேர்க்கப்படவேண்டும். அவை குறைவான தொகையாக இருந்து, பலவருடங்களின் பின்னர்தான் சேர்க்க முடியுமாக இருக்கும் என்றிருந்தால், துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்துத் தினங்களில் அவற்றைத் தர்மமாகக் கொடுக்க வேண்டும்.
வஸிய்யத் செய்பவர் ஒருவராக இருந்து, அவர் பல உழ்ஹிய்யாவுக்காக வஸிய்யத்கள் செய்திருந்து, வருமானம் அவையனைத்துக்கும் போதுமாக இல்லாவிட்டால், வஸிய்யத் செய்தவர் விரும்பினால், அனைத்து உழ்ஹிய்யாகளையும் ஒரு உழ்ஹிய்யாவில் ஒன்று சேர்த்துவிடலாம். ஏனெனில், வஸிய்யத் செய்தவர் ஒருவரே. மேலும், அவர் விரும்பினால், ஒரு வருடம் ஒரு உழ்ஹிய்யாவையும், அடுத்த வருடம் இன்னொரு உழ்ஹிய்யாவையும் கொடுக்கலாம். முதலாவதே ஏற்றமானதாகும்.
* * *
முக்கிய எச்சரிக்கை : வஸியத் செய்யும் சிலர், வக்ஃபு வருமானத்தில் இருந்து உழ்ஹிய்யா விலையை நிர்ணயிக்கும் போது, தாம் நிர்ணயிக்கும் அளவுக்கு அதன் விலை வரமாட்டாது எனும் எண்ணத்தில், அதன் விலையை மிகைப்படுத்திக் காட்டும் நோக்கில் நிர்ணயம் செய்கின்றனர். உதாரணமாக அவர், ‘எனக்காக உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும். அதன் விலை ஒரு ரியாலாக இருந்தாலும் சரியே!’ என்று கூறுவார். அதன் காரணம், அந்த நேரத்தில் உழ்ஹிய்யா அதிக இலாபமாக இருக்கும் என்பதே.ஆனால், வஸியதுக்குப் பொறுப்பானவர்களில் அல்லாஹ்வை அஞ்சாத சிலர், வஸியத் செய்தவர், விலையை ஒரு ரியால் என்று தான் நிர்ணயம் செய்தார். அந்த விலையில் உழ்ஹிய்யா கிடையாது எனக் கூறிக்கொண்டு, உழ்ஹிய்யா கொடுக்காமல் விட்டுவிடுகின்றனர். ஆனால், வருமானமோ அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் செய்வது ஹராமாகும். அவர் பாவியாவார். உழ்ஹிய்யா பல ஆயிரம் ரியால்களாக இருந்தாலும், வருமானம் அதற்குப் போதுமாக இருந்தால் அவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவது கட்டாயமாகும். ஏனெனில், இவ்வாறான நிர்ணயத்தைக் கொண்டு வஸியத் செய்பவர் எதிர்பார்ப்பது, உழ்ஹிய்யாவின் பெறுமதியை மிகைப்படுத்திக் காட்டுவதே அன்றி, இந்த அளவைக் கொண்டு வரையறுப்பதல்ல.
* * *
பகுதி ஐந்து
ஒரு பிராணி எப்போது உழ்ஹிய்யாப் பிராணியாக மாறும்? மேலும் அது தொடர்பான சட்டங்கள்.
பின்வரும் இரண்டு விடயங்களில் ஒன்றின் மூலம் ஒரு பிராணி உழ்ஹிய்யாவாக மாறும்:
1- வார்த்தை; உழ்ஹிய்யாவைக் குறிப்பாக்கும் நோக்கில், உதாரணமாக, “இது உழ்ஹிய்யாவாகும்” எனக் கூறல். ஆனால், எதிர்காலத்தில் தான் நிறைவேற்ற நாடியுள்ளதாகக் கூற நினைத்தால், அது உழ்ஹிய்யாவாகக் குறிப்பாகமாட்டாது. ஏனெனில், இதன் நோக்கம், எதிர்காலத்தில் செய்யப் போவதைக் கூறுவதே அன்றி, உழ்ஹிய்யாவைக் குறிப்பாக்கிக் கூறுவதல்ல.
இரண்டாவது : செயல், இது இரண்டு வகைப்படும் :
1. உழ்ஹிய்யா நோக்கத்துடன் அதனை அறுத்துப் பலியிடல். இந்த நிய்யத்துடன் அறுத்துவிட்டார் என்றால், அதற்கு உழ்ஹிய்யாவின் சட்டம் நிலைபெறும்.
இரண்டாவது: உழ்ஹிய்யாவின் நோக்கத்தில் அதை (அது குறிப்பாக்கப்பட்ட ஒன்றுக்கு பதிலாக இருந்தால்) வாங்குதல்; உதாரணமாக, அவர் ஒரு குறிப்பான உழ்ஹிய்யா பிராணியை வைத்திருந்து, அவரது அலட்சியத்தால் அது மரணித்துவிடவே, அந்த மரணித்த உழ்ஹிய்யாவுக்குப் பதிலாக வழங்கும் நோக்கில் மற்றொன்றை வாங்குதல். இந்த நோக்கத்தில் அவர் இவ்வாறு வாங்கியவுடன் அது உழ்ஹிய்யாவாக குறிப்பாகிவிடும். ஏனெனில் அது குறிப்பாக்கப்பட்ட ஒரு பிராணிக்கு மாற்றீடானதாகும். எனவே, மாற்றீடான பொருளுக்கு, முதலாவது பொருளின் சட்டம் வரும்.
ஆனால் அது குறிப்பான ஒரு பிராணிக்கு பதிலாக இல்லாவிட்டால், உழ்ஹிய்யா கொடுக்கும் நோக்கத்தில் வாங்கியவுடன் அது உழ்ஹிய்யாவாக மாறாது. உதாரணமாக, ஒருவர் ஒரு அடிமையை, உரிமையிடும் நோக்கில் வாங்குகின்றார். இந்நிலையில் அவர் வாங்கியதினால் மாத்திரம், அவன் விடுதலையானவராக மாறமாட்டான். அல்லது ஒருவர் ஏதாவது ஒன்றை வக்ஃப் செய்யும் நோக்கில் வாங்கினால், வாங்கியதினால் மாத்திரம் அது வக்ஃப் ஆக மாறமாட்டாது. அதுபோன்றுதான், ஒருவர் ஒரு மிருகத்தை உழ்ஹிய்யா கொடுக்கும் நோக்கில் வாங்கினாலும், உடனே அது அது உழ்ஹிய்யாவாக மாறமாட்டாது.
ஒரு பிராணி ஒரு உழ்ஹிய்யா பிராணியாக மாறிவிட்டால், அதனுடன் சில மார்க்க சட்டநிலைகள் சம்பந்தப்படும் [28]: (28) (ஹஜ்ஜில்) ‘ஹத்யு’ ஆக அறுக்கப்படும் பிராணிகளும், இந்த சட்டங்களில் உழ்ஹிய்யாவின் சட்டநிலையைப் போன்றதாகும். [ஆசிரியர்]
1. உழ்ஹிய்யா கொடுக்க வேண்டிய பிராணிகளை விற்பனை செய்வது, அன்பளிப்பாக வழங்குவது, அடமானம் வைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது கூடாது. ஆனால், தனிப்பட்ட நோக்கத்திற்காக அல்லாமல், உழ்ஹிய்யாவின் நன்மைக்காக அதைவிடச் சிறந்த ஒன்றை மாற்றிக் கொள்ளலாம். எனவே, ஒரு ஆட்டை உழ்ஹிய்யாவாக அடையாளப்படுத்தி விட்டு, பின்பு தனிப்பட்ட ஒரு நோக்கத்தினால் அதன் மேல் ஏற்பட்ட விருப்பத்தின் காரணமாக, கைசேதப்பட்டு, அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அதைவிடச் சிறந்த ஒன்றை மாற்றிக் கொள்ள விரும்பினால், அவ்வாறு செய்ய அனுமதியில்லை; ஏனெனில் இது, அல்லாஹ்வுக்காக வழங்கியதை, உழ்ஹிய்யாவின் நன்மைக்காக அல்லாமல், தனிப்பட்ட விருப்பத்திற்காக மீண்டும் பெறுவதாகும்.
2. அது உழ்ஹிய்யா பிராணியாக அடையாளப்படுத்தப்பட்ட பின் மரணித்து விட்டால், வாரிசுகள் அதை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். எனவே, அவ்வாறு அடையாளப்படுத்த முன்னர் அது மரணித்தால், அது அவர்களின் சொத்தாகும். அவர்கள் விரும்பியபடி அதில் செயற்படலாம்.
3. அவற்றை வைத்து எந்த விதத்திலும் பயனடையக் கூடாது. எனவே, அவற்றை உழவு போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது. அவற்றின் மீது, தேவையேற்பட்டால் மாத்திரம், பாதிப்பு ஏற்படாத விதத்தில் சவாரி செய்ய வேண்டும். அவற்றைப் பலவீனப்படுத்தும் அளவிற்கோ, அவற்றோடு இருக்கும் கன்றின் தேவைக்கு இல்லாமல் போகும் அளவுக்கோ அவற்றின் பாலைப் பயன்படுத்தக் கூடாது. அவற்றின் முடிகள் போன்றவற்றை அவற்றுக்கு பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே வெட்டவேண்டும், அவ்வாறு வெட்டினால், அவற்றை தானமாகவோ, அன்பளிப்பாகவோ வழங்கலாம், அல்லது பயனடையலாம். ஆனால் விற்கக்கூடாது.
நான்காவது: அது உழ்ஹிய்யாவாக நிறைவேறுவதைத் தடுக்கும் ஏதாவது குறைகள் அதற்கு ஏற்பட்டால், உதாரணமாக: ஒருவர் ஒரு ஆடினை வாங்கி, அதனை உழ்ஹிய்யாவுக்காக அடையாளப்படுத்திய பின்னர், அதன் கண் பலவீனப்பட்டு, தெளிவாக ஒற்றைக்கண் குருடானதாக மாறிவிட்டால், அதற்கு இரண்டு நிலைகள் உள்ளன:
1. அவரது ஒரு செயலினாலோ அல்லது அலட்சியத்தினாலோ அது ஏற்பட்டிருந்தால், அவர் அதனை அதே தரத்திலோ அல்லது அதைவிட மேம்பட்டதாகவோ மாற்றி கொடுக்க வேண்டும். ஏனெனில் அதற்குக் குறையேற்பட்டது அவரின் காரணமாகவே. எனவே, அதற்கான பொறுப்பை அவரே ஏற்று அதற்குப் பதிலாக, அதுபோன்ற ஒன்றை அறுத்துப் பலியிட வேண்டும். இந்நிலையில், குறையேற்பட்ட பிராணி அவனுடைய சொத்தாக மாறிவிடும் என்பதே சரியான கருத்தாகும். அதனை அவன் விற்பனை செய்வதோ அல்லது வேறு எதற்கும் பயன்படுத்துவதோ அவனுடைய விருப்பமாகும்.
இரண்டாவது: அந்தக் குறை, அவனது செயலோ, அலட்சியமோ இன்றி ஏற்படல். இந்நிலையில் அவன் அதைப் பலியிட வேண்டும். அது அவனுக்கு போதுமானதாக இருக்கும். ஆனால் அது அவன் அடையாளப்படுத்த முன்னரே அவனது பொறுப்பில் இருந்திருந்தாலே தவிர. ஏனெனில், அது அவனிடத்தில் உள்ள அமானிதமாகும். அந்தக் குறை அவனது செயலினாலோ, அலட்சியத்தினாலோ ஏற்படவில்லை. எனவே அவன் மீது குற்றமும் கிடையாது. அவன் பொறுப்பேற்கவேண்டியதும் இல்லை.
அவன் அடையாளப்படுத்த முன்னர், அது அவனது பொறுப்பில் கடமையாக இருந்தால், அவன் அதை அவனது பொறுப்பிலுள்ளதை நிறைவேற்றக்கூடிய முறையில் மாற்றுவது அவசியமாகும்.
உதாரணமாக, "இந்த வருடம் நான் உழ்ஹிய்யா வழங்குவதாக அல்லாஹ்வுக்காக நேர்ச்சை வைத்துள்ளேன்" என ஒருவர் கூறி, ஒரு பலியிடும் மிருகத்தை வாங்கி, அதை நேர்ச்சைக்காக அடையாளப்படுத்திய பின்னர், அது பலியிடுவதற்கு தகுதியற்ற குறைபாடால் பாதிக்கப்படுமானால், அதற்குப் பதிலாக தகுதியான மற்றொரு மிருகத்தை மாற்றிக் கொள்வது அவனுக்கு கடமையாகும். குறைபாடுள்ள மிருகம் அவனுக்கே உரியதாகும். ஆனால், குறையுள்ள மிருகம் அதை விட விலை உயர்ந்ததாக இருந்தால், அவன் அதன் மதிப்பில் உள்ள வித்தியாசத்தை தர்மமாக வழங்க வேண்டும்.
ஐந்தாவது: அது தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால்; அதற்கும் இரண்டு நிலைகள் உள்ளன:
1. அது அவனது அலட்சியத்தால் நிகழல், உதாரணமாக: அதை பாதுகாப்பற்ற இடத்தில் வைத்து, அதனால் அது தப்பியோடல் அல்லது திருடப்படல். இப்போது, அவன் அதற்குப் பதிலாக அதே வகையில் அல்லது அதைவிட மேம்பட்ட ஒன்றை அறுத்துப் பலியிட வேண்டும். எனவே, தொலைந்தது அல்லது திருடப்பட்டது அவனுடைய சொத்தாகிவிடும். அதனை அவன் கண்டுபிடித்தால், அவன் விரும்பியபடி விற்றல் போன்றவற்றைச் செய்யலாம்.
2. அது அவரது அலட்சியமின்றி நிகழல். அவ்வாறிருந்தால், அடையாளப்படுத்த முன்னர் அவரது பொறுப்பில் இருந்தாலே தவிர, அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஏனெனில், அது அவனிடம் அமானிதமாகவே உள்ளது. அமானிதத்தை ஏற்றுள்ளவர், அலட்சியம் காட்டாவிட்டால் அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் அதனைப் பெற்றவுடனேயே - நேரம் கடந்து விட்டாலும்- அதனைப் பலியிடுதல் அவனது கடமையாகும். திருடியவன் அதை உழ்ஹிய்யாக் கொடுத்து விட்டாலும் அவ்வாறுதான். அவன் உழ்ஹிய்யாக் கொடுத்துவிட்ட பிராணி போன்ற ஒன்றைக் குறைவின்றி உரிமையாளருக்காக உழ்ஹிய்யாக் கொடுப்பது கட்டாயமாகும்.
அடையாளப்படுத்த முன்னரே அது அவனுடைய பொறுப்பில் கட்டாயமாக இருந்தால், அவன் அதற்குப் பதிலாக அவனுடைய பொறுப்பில் உள்ளதை நிறைவேற்றக்கூடிய ஒன்றைப் பலியிட வேண்டும். அதனைக் கண்டுபிடித்தால் அது அவனது உரிமையாகும். அதனை விற்பனை செய்யவோ, அல்லது வேறு எதற்காகவோ பயன்படுத்தவோ அவனுக்கு உரிமை உண்டு. ஆனால் பதிலாக அறுக்கப்பட்டது அதைவிடக் குறைவானதாக இருந்தால், விலை வேறுபாட்டின் பெறுமதியை தர்மமாக வழங்கவேண்டும்.
ஆறாவது: அவை இறந்துவிட்டால், அதற்குத் மூன்று நிலைகள் உள்ளன:
1. அது மனித செயலுக்கு அப்பாற்பட்ட ஒரு காரணத்தால் அழிந்துவிடல். உதாரணமாக, நோய், இயற்கை அனர்த்தம், அதுவாக செய்யும் ஒரு செயல் போன்றவற்றால் அது இறந்துவிடல். அவ்வாறு இறந்தால், அடையாளப்படுத்த முன்னர் அவரது பொறுப்பில் இருந்தாலே தவிர, அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஏனெனில், அது அவனிடம் அமானிதமாகவே உள்ளது. பொறுப்புச் சுமத்த முடியாத ஒரு காரணத்தினால் அது மரணித்துவிட்டதால், அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அடையாளப்படுத்த முன்னர் அது அவரது பொறுப்பில் இருந்தால், அதற்குப் பதிலாக நிறைவேறும் ஒன்றை அவர் அறுப்பது கட்டாயமாகும்.
2. அது, அதன் உரிமையாளரின் செயலால் இறந்துவிடல். இந்நிலையில், அதற்குப் பதிலாக அதே வகையிலான அல்லது அதைவிடச் சிறந்த ஒன்றை அறுத்துப் பலியிடவேண்டும்; ஏனெனில், இந்நிலையில் அவர் பொறுப்பேற்பது கட்டாயமாகும்.
3. அது ஒரு மனிதனால், அதாவது அதனுடைய உரிமையாளர் அல்லாத ஒருவரால் சேதமடைந்தால், அவரை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை -பாதுகாப்பற்ற வழிப்பறிக்காரர்கள் போன்றவர்கள்- இருந்தால், அது மனிதனால் செய்யப்படாத காரணத்தால் சேதமடைந்தது எனக் கருதப்படும், முதல் நிலையில் கூறியபடி.
பொறுப்பு சுமத்த முடியுமான ஒன்றாக அது இருந்தால், - உதாரணமாக, குறித்த ஒரு மனிதர் அதை அறுத்து சாப்பிட்டுவிடல், அல்லது கொன்றுவிடல் - இந்நிலையில் அது போன்ற ஒன்றை அவர் பொறுப்பேற்று, உழ்ஹிய்யாக் கொடுப்பதற்காக, உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும். ஆனால், உரிமையாளர் அவரை மன்னித்து, அவராக அக்கடமையை நிறைவேற்றினாலே தவிர.
7. அறுப்பதற்குரிய நேரத்துக்கு முன்னர் அது அறுக்கப்பட்டால், - அது உழ்ஹிய்யாவுடைய நோக்கத்தில் இருந்தாலும் சரி - அதனுடைய சட்டம், முன்னர் குறிப்பிட்ட மரணித்த பிராணியின் சட்டம் போன்றதே.
அறுக்கும் நேரத்தில் அது அறுக்கப்பட்டால், அதனை அறுத்தவர் அதற்குரிய உரிமையாளராக அல்லது அவரின் பிரதிநிதியாக இருந்தால், அது சரியான முறையில் அறுக்கப்பட்டதாகும். ஆனால் அறுத்தவர், உரிமையாளராகவோ அல்லது அவரின் பிரதிநிதியாகவோ இல்லாவிட்டால், அதற்கு மூன்று நிலைகள் உள்ளன:
1. அதனை அதன் உரிமையாளருக்காக என நிய்யத் வைத்தல். இந்நிலையில், அதன் உரிமையாளர் அதனை ஏற்றுக் கொண்டால் அது நிறைவேறும். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அது நிறைவேறமாட்டாது என்பதே சரியான கருத்தாகும். அறுத்தவர் அதற்குச் சமமான ஒன்றைப் பொறுப்பேற்று, உழ்ஹிய்யா கொடுப்பதற்காக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அதன் உரிமையாளர் அதிலிருந்து அவரை விடுவித்து, அதற்குரிய பெறுமதியைப் பார்த்தாலே தவிர
இதற்காக அவர் சம்மதிக்காவிட்டாலும் நிறைவேறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவே அஹ்மத், ஷாபிஈ மற்றும் ஆபூ ஹனீபா (ரஹ்) ஆகியோரின் பிரபலமான மத்ஹபாகும். (29) (29) முந்தஹா அல்இராதாத் – பஹூதியின் விளக்கத்துடன் (2/610), அல்இக்தியார் லிதஅலீல் அல்முக்தார் (5/21), அல் துர் அல்முக்தார் இப்னு ஆபிதீனின் அடிக்குறிப்புடன் (5/209).
2. அதனை, உரிமையாளருக்காக அல்லாமல், தனக்காக நாடுதல். இந்நிலையில், அது வேறொருவருடையது என்பதை அறிந்திருந்தால், அது அவருக்காகவும், வேறு எவருக்காகவும் நிறைவேறாது. அறுத்தவர் அதற்குச் சமமான ஒன்றைப் பொறுப்பேற்று, உழ்ஹிய்யா கொடுப்பதற்காக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அதன் உரிமையாளர் அதிலிருந்து அவரை விடுவித்து, அதற்குரிய பெறுமதியைப் பார்த்தாலே தவிர. அது, அதன் உரிமையாளருக்காக நிறைவேறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பங்குவைத்த இறைச்சியை அவர் பொறுப்பேற்க வேண்டும்.
அது மற்றொருவருக்குச் சொந்தமானது என்பதை அவன் அறியாவிட்டால், அது அதன் உரிமையாளருக்காக நிறைவேறும். ஆனால், அதை அறுத்தவர் அதன் இறைச்சியைப் பகிர்ந்துவிட்டால், அதற்குச் சமமானதை அதன் உரிமையாளருக்கு வழங்க அவன் பொறுப்பாக இருக்க வேண்டும்; அவர் பகிர்ந்ததை உரிமையாளர் ஏற்றுக் கொண்டாலே தவிர.
3. யாரையும் நாடாமல் இருத்தல். இங்கு நிய்யத் இல்லாத காரணத்தினால், இருவரில் ஒருவருக்கும் அது நிறைவேறமாட்டாது. உரிமையாளருக்காக அது நிறைவேறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஏதாவது ஒரு நிலையில், உரிமையாளருக்காக அது நிறைவேறி விட்டால், இறைச்சி மீதமிருந்தால் அதற்குரியவர் அதை எடுத்துக்கொண்டு உழ்ஹிய்யா பிரித்தல் முறையில் பங்கிட வேண்டும். மேலும் அறுப்பவர் உழ்ஹிய்யா பிரித்தல் முறையில் பங்கிட்டு, உரிமையாளர் அதில் திருப்தியடைந்தால், அறுப்பவருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. இல்லையெனில், உரிமையாளருக்காக அவர் பொறுப்பு நின்று, உழ்ஹிய்யா பிரித்தல் முறையில் பங்கிட வேண்டும்.
இரு பயன்கள்:
முதலாவது: அறுக்கப்பட்ட பின், உழ்ஹிய்யா பிராணி சேதமடைந்து விட்டால், அல்லது திருடப்பட்டால் அல்லது கேட்டுப்பெறமுடியாத எவரும் எடுத்துச் சென்றால், உரிமையாளரின் அலட்சியம் இல்லாத போது, அவர் எவ்விதப் பொறுப்பும் ஏற்க வேண்டியதில்லை. ஆனால் அவர் அலட்சியம் காட்டியிருந்தால், தர்மம் செய்ய வேண்டிய அளவிற்கு பொறுப்பேற்க வேண்டும், பின்னர் அதனை தர்மம் செய்ய வேண்டும்.
இரண்டாவது: ஒரு உழ்ஹிய்யா பிராணி அடையாளப்படுத்தப்பட்ட பின்னர், ஒரு கன்றைப் பெற்றெடுத்தால், முன்னர் அந்தப் பிராணிக்குக் கூறிய அனைத்து சட்டங்களும் கன்றுக்கும் வரும். அடையாளப்படுத்த முன்னர் அது பெற்றெடுத்தால், அதற்கு சட்டம் வேறுபடும். உழ்ஹிய்யா என்பதில் அது தன் தாயைப் பின்துயரமாட்டாது. ஏனெனில், அது தாயிடமிருந்து பிரிந்த பின்னரே தவிர, உழ்ஹிய்யாவாக மாறவில்லை.
* * *
பகுதி ஆறு
உழ்ஹிய்யாவில் உண்ணப்படும் அளவும், பகிரப்படும் அளவும்.
உழ்ஹிய்யாக் கொடுப்பவர், தமது உழ்ஹிய்யாவிலிருந்து தாமும் உண்ணலாம், அன்பளிப்பாகவும் வழங்கலாம், தர்மமும் செய்யலாம்; அல்லாஹ் கூறுகின்றான் : “அவற்றிலிருந்து புசியுங்கள். இன்னும், வறியவருக்கும் ஏழைக்கும் (அவற்றிலிருந்து) உணவளியுங்கள்.” (அல் ஹஜ் : 28) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : “அவற்றிலிருந்து சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள்.” (அல் ஹஜ் : 36), கானிஃ: தாழ்மையுடன் கேட்பவர். முஃதர் : அன்பளிப்பை கேட்காமல் எதிர்பார்ப்பவர்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸலமா இப்னுல் அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : “நீங்களும் சாப்பிடுங்கள்; பிறருக்கும் உணவளியுங்கள், சேமித்தும் வையுங்கள்.” ஆதாரம் : புஹாரி [30] உணவளித்தல் என்பது வசதியுள்ளோருக்கு அன்பளிப்பு வழங்குவதையும், ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதையும் உள்ளடக்கும். (30) ஆதாரம் : புஹாரி, உழ்ஹிய்யா பற்றிய பாடம், உழ்ஹிய்யாவின் இறைச்சிகளில் சாப்பிடமுடியுமானவை. ஹதீஸ் எண் (5569).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : “சாப்பிடுங்கள்; சேமித்து வையுங்கள்; தர்மமும் செய்யுங்கள்.” (ஆதாரம் : முஸ்லிம் [31]). (31) முஸ்லிமில், உழ்ஹிய்யா பற்றிய பாடம், உழ்ஹிய்யாவின் இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேலால் உண்ணுவதற்கு தடை விதிக்கப்பட்டது பற்றிய விளக்கம் என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 1971 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(உழ்ஹிய்யா இறைச்சியில்) உண்ண முடியுமான அளவு, அன்பளிப்புச் செய்யும் அளவு மற்றும் தர்மம் செய்யும் அளவு ஆகியவற்றில் அறிஞர்கள் கருத்து வேறுபட்டுள்ளனர். இது விசாலத் தன்மை கொண்டதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தாவது: அவர் மூன்றில் ஒரு பகுதியை உண்ணவும், மூன்றில் ஒரு பகுதியை அன்பளிப்பாக வழங்கவும், மூன்றில் ஒரு பகுதியை தர்மம் செய்யவும் செய்வார். அவற்றில் உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியை, நீண்ட காலமாக இருந்தாலும், சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படாத அளவு சேமிக்க அனுமதிக்கப்பதுகின்றது. ஆனால் பஞ்ச காலத்தில், மூன்று நாட்களுக்கு மேல் சேமிக்க அனுமதியில்லை. ஏனெனில், ஸலமா இப்னுல் அக்வஃ (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் யார் குர்பானி பிராணியை அறுக்கிறாரோ அவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாட்களுக்குப்பின் (அதிலிருந்து எதுவும் அவரது வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்” என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று நான் விரும்பி னேன்” எனப் பதிலளித்தார்கள். இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர் (32). (32) ஆதாரம் : புஹாரி, உழ்ஹிய்யா பற்றிய பாடம், உழ்ஹிய்யாவின் இறைச்சிகளில் சாப்பிடமுடியுமானவை. ஹதீஸ் எண் (5569), முஸ்லிம், உழ்ஹிய்யா பற்றிய பாடம், உழ்ஹிய்யாவின் இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேலால் உண்ணுவதற்கு தடை விதிக்கப்பட்டது பற்றிய விளக்கம் என்ற தலைப்பில், ஹதீஸ் எண் (1974), இவ்வார்த்தை புஹாரியிலிருந்து பெறப்பட்டதாகும்.
உழ்ஹிய்யாவில் இருந்து சாப்பிடுவதிலும், பிறருக்கு வழங்குவதிலும், அந்த உழ்ஹிய்யா ஸுன்னாவாகவோ அல்லது கடமையாகவோ இருப்பதிலும், அது உயிருடன் இருப்பவருக்காகவோ அல்லது இறந்தவருக்காகவோ இருப்பதிலும், அல்லது வஸிய்யத் அடிப்படையிலாக இருப்பதிலும் எந்த வேறுபாடும் கிடையாது. ஏனெனில் வஸிய்யத்தைப் பொறுப்பேற்பவர், வஸிய்யத் செய்தவரின் இடத்தில் நோக்கப்படுவார். வஸிய்யத் செய்தவருக்கு சாப்பிடவும், அன்பளிப்பு வழங்கவும், தர்மம் செய்யவும் முடியும். மேலும், இதுவே மக்களிடம் பரவலாக உள்ள வழக்காறாகும். பரவலாக உள்ள வழக்காறு, சட்டமாக வாயால் சொல்லப்பட்டதைப் போன்றது.
ஆனால், (உரிமையாளரால்) பொறுப்புச் சாட்டப்பட்டவரைப் பொறுத்தவரை, பொறுப்புச் சாட்டியவர் உண்ணவும், அன்பளிப்பு வழங்கவும், தர்மம் செய்யவும் அனுமதி அளித்தால், அல்லது, ஒரு சான்றோ, வழக்காறோ அதை உணர்த்தினால் அவருக்கு அவ்வாறு செய்யலாம். இல்லையெனில், பொறுப்புச் சாட்டியவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். அதனைப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பு அவருக்கு உரியதாகும்.
உழ்ஹிய்யாவின் இறைச்சியையோ, அல்லது தோல் உட்பட வேறு எதனையுமோ விற்பது ஹராமாகும். அறுத்தவருக்குக் கூலிக்குப் பதிலாகவோ, அல்லது கூலியின் ஒரு பகுதியாகவோ, அதில் இருந்து எதையும் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது வியாபாரத்தின் அர்த்தத்தில் உள்ளதாகும்.
யாருக்காவது, அதிலிருந்து அன்பளிப்பாகவோ, தர்மமாகவோ கிடைத்தால், அதில் அவர் நாடிய விதத்தில் விற்கவோ, வேறு எதுவும் செய்யவோ அனுமதியுண்டு. ஆனால் அதனை அன்பளிப்பாக அல்லது தானமாக வழங்கியவருக்கே மீண்டும் விற்கக் கூடாது.
* * *
பகுதி ஏழு
உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தவிர்க்கவேண்டியவை
ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க நாடியுள்ள நிலையில், துல்ஹஜ் மாதம் பிறை தென்பட்டோ அல்லது துல் கஃதா மாதம் முப்பது நாட்களாக பூர்த்தியாகியோ துல் ஹஜ்ஜின் பத்து நாட்களும் ஆரம்பித்து விட்டால், அவர் தனது உடல் ரோமங்களைக் களையவா, நகங்களை வெட்டவோ, மேனியிலிருந்து எதையும் அகற்றவோ கூடாது. உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்: “நீங்கள் துல்ஹஜ் பிறையைப் பார்த்தால் - அல்லது, துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், - உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால், அவர் தமது உடல் ரோமங்களையும் நகங்களையும் களைவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” இமாம் அஹ்மத் மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது[33], (33) ஆதாரம் : முஸ்லிம், உழ்ஹிய்யா பற்றிய பாடம், துல் ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் வந்தவுடன் உழ்ஹிய்யா கொடுக்க விரும்புபவருக்கு, அவரின் உடல் ரோமங்களை களைவது தடை செய்யப்படல் பற்றிய பகுதி, ஹதீஸ் எண் (1977), அஹ்மத் (6/ 289). இன்னொரு அறிவிப்பில்: “அவர் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை தமது தலைமுடியிலோ, நகங்களிலோ எதையும் வெட்ட வேண்டாம்". (34), இன்னொரு அறிவிப்பில்: இந்த ஹதீஸ் முஸ்லிமில், மேற்கூறப்பட்ட தலைப்பிலேயே 1977/42 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “அவர் தன் தலைமுடியிலோ உடலிலோ எதையும் தொடக்கூடாது. (35) (35) இந்த ஹதீஸ் முஸ்லிமில் மேற்கூறப்பட்ட தலைப்பிலேயே 1977/39 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
அந்தப் பத்து நாட்கள் ஆரம்பித்த பின்னர், ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க நிய்யத் வைத்தால், அந்த நிய்யத் வைத்த தருணத்திலிருந்து உடல் ரோமங்களைக் களைய வேண்டாம். நிய்யத் வைப்பதற்கு முன் களைந்திருந்தால் அதில் எந்தக் குற்றமும் இல்லை.
இந்தத் தடை விதிக்கப்படுவதற்கான நுட்பமாவது: உழ்ஹிய்யா கொடுப்பவர், அல்லாஹ்வின் திருப்திக்காக குர்பானி கொடுப்பது என்ற, ஹஜ் கடமையை நிறைவேற்றுபவரின் கிரியையில் பங்கேற்கின்ற காரணத்தினால், இஹ்ராமின் தனிச்சட்டங்களில் ஒன்றாகிய, தலைமுடி மற்றும் இதரவற்றை வெட்டாமல் இருப்பது என்பதில் அவர்களுடன் பங்கேற்கின்றார்.
இது உழ்ஹிய்யா கொடுப்பவருக்கே உரிய சட்டமாகும். ஆனால் யாருக்காக உழ்ஹிய்யா கொடுக்கப்படுகிறதோ அவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது; ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: “உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால்” என்றுதான் கூறினார்கள் “யாருக்காக உழ்ஹிய்யா கொடுக்கப்படுகின்றதோ அவர்களும்” என்று கூறவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினருக்காக உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள்.(36) எனினும், அவர்களுக்கும் அதைத் தவிர்க்குமாறு கட்டளையிட்டதாக எந்த ஆதாரமம் இல்லை. (36) இதன் மேற்கோள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது (பக்கம் 06)
எனவே, உழ்ஹிய்யா கொடுப்பவரின் குடும்பத்தினர் துல் ஹஜ் மாதத்தின் பத்து நாட்களில் தமது உடல் மற்றும் மேனியின் ரோமங்களையும், நகங்களையும் வெட்டிக் கொள்ளலாம்.
உழ்ஹிய்யா கொடுக்க விரும்புபவர் தனது உடல் ரோமங்களையோ, நகங்களையோ, மேனியிலிருந்து ஏதாவது ஒன்றையோ எடுத்துவிட்டால், அவர் அல்லாஹ்விடம் தௌபா செய்து மீள வேண்டும். மீண்டும் செய்யக்கூடாது. அதற்காக பரிகாரம் அவசியமில்லை. சில பொதுமக்கள் நினைப்பது போல அது உழ்ஹிய்யாவைத் தடுக்காது.
மறதியாகவோ, அறியாமையாலோ நீக்கி விட்டால், அல்லது நாட்டமின்றி முடி விழுந்து விட்டால் அவர் மீது குற்றமில்லை. அதை நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நீக்கிக் கொள்ளலாம், அவரின் மீது எவ்விதக் குற்றமுமில்லை. உதாரணமாக: நகம் முறிந்துவிட்டால், அது அவருக்கு துன்பம் தரும் பட்சத்தில் அதை வெட்டிவிடலாம், அல்லது தலைமுடி கண்களில் விழுந்தால் அதை அகற்றலாம், அல்லது காயம் போன்றவற்றை சிகிச்சை செய்ய முடியை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வெட்டலாம்.
* * *
பகுதி எட்டு
மிருகங்களை அறுத்தல் மற்றும் அதன் நிபந்தனைகள்
மிருகங்களை அறுத்தல்: இது பிராணிகள், சாப்பிட ஹலாலாக ஆவதற்கு அவசியமான ஒன்றாகும். இது ஒன்றில் நஹ்ர் அல்லது தப்ஹ் அல்லது ஜர்ஹ் ஆகும். நஹ்ர் ஒட்டகங்களுக்கும், தப்ஹ் மற்ற மிருகங்களுக்கும் உரியதாகும். ஜர்ஹ் (காயப்படுத்துதல்) என்பது, அவ்வாறு செய்வதைத் தவிர, வேறு விதத்தில் அறுக்க முடியாத மிருகங்களுக்காகும்.
அறுத்தலுக்கு ஒன்பது நிபந்தனைகள் உள்ளன:
முதலாவது: மிருகத்தை அறுப்பவர் புத்திசுவாதீனமுடையவராகவும், விவரமறியும் பருவத்தை அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்; ஆகையால், பைத்தியக்காரன், போதையில் உள்ளவர், விவரமறியாத சிறுவன், அல்லது விவரமறியும் திறனை இழந்த முதியவர் போன்றோரால் அறுக்கப்பட்ட மிருகம் ஹலால் ஆகாது.
இரண்டாவது: மிருகத்தை அறுப்பவர் முஸ்லிமாகவோ அல்லது யூத, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ‘கிதாபி’ யாகவோ இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் ஆணாகவோ பெண்ணாகவோ, நீதமானாகவோ பாவியாகவோ, தூய்மையானவனாகவோ அல்லது தூய்மையற்றவனாகவோ இருந்தாலும், அவன் அறுத்தது ஹலால் ஆகும். அதேபோல், யூத, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தச் சார்ந்த ‘கிதாபி’யின் அறுப்பும் ஹலாலாகும். அவனின் தந்தை மற்றும் தாய் யூத, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே.
ஒரு கிதாபி அறுத்தவை ஹலால் ஆகும் என்பதை முஸ்லிம்கள் ஏகோபித்து ஏற்றுள்ளனர். அல்லாஹ் கூறுகின்றான்: “வேதம் கொடுக்கப்பட்டவர்களின் புலால் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்!” (அல் மாயிதா : 5) நபி ﷺ அவர்கள், ஒரு யூதப் பெண் அவர்களுக்கு பரிசளித்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்டார்கள் (37) மற்றொரு யூதர் அவர்களை அழைத்த போது, அவர்களால் வழங்கப்பட்ட கோதுமை ரொட்டியும் பழைய கொழுப்பையும் உண்டார்கள். (38) (37) ஆதாரம் : புஹாரி, அன்பளிப்பு பற்றிய பாடம், முஷ்ரிக்களிடமிருந்து அன்பளிப்பை ஏற்றுக்கொள்வது என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 2617, முஸ்லிம், ஸலாம் என்ற பாடம், விஷம் என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 2190, அறிவிப்பவர் : அனஸ் (ரழி) அவர்கள். (38) ஆதாரம் : இமாம் அஹ்மத் அவர்களின் "அல் முஸ்னத்" (3/210) அறிவிப்பவர் : அனஸ் (ரழி) அவர்கள்.
வேதமுடையவர்களல்லாத மற்ற நிராகரிப்பாளர்களால் அறுக்கப்பட்டதை உண்ணுவது அனுமதிக்கப்படாது; ஏனெனில் அல்லாஹ்: “வேதம் கொடுக்கப்பட்டவர்களின் புலால் உணவு” என்றுதான் கூறுகின்றான். எனவே “வேதம் கொடுக்கப்பட்டவர்கள்” என்பது, ஒரு வரையறையை உள்ளடக்கியுள்ளது. எனவே, அது இருந்தால் தான் சட்டம் வரும். இல்லாவிட்டால், சட்டம் வரமாட்டாது. இமாம் அஹ்மத் அவர்கள் கூறினார்கள்: 'இதற்கு மாறாக யாரும் கூறியதாக எனக்கு தெரியவில்லை, ஆனால் அது ஒரு பித்அத்காரர் கூற வாய்ப்புள்ளது’ இதில் இஜ்மா இருப்பதாக, இமாம் காஸின் அவர்கள் தமது 'தஃப்ஸீர்' [39] இல் குறிப்பிட்டுள்ளார்கள். (39) தப்ஸீர் அல்-காஸின் (பாகம் 1 பக்கம் 467)
இதன் அடிப்படையில், கம்யூனிஸ்ட்கள் மற்றும் இணைவைப்பாளர்கள் அறுத்தவற்றை உண்ணுவது அனுமதிக்கப்படாது, அவர்கள் செயலால் இணைவைக்கும் சிலைவணங்கிகள் போன்றவர்களாகவோ, அல்லது வார்த்தைகளால் இணைவைக்கும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களாகவோ இருக்கலாம். தொழுகையை விட்டவரால் அறுக்கப் பட்டதை உண்ணுவதும் அனுமதிக்கப் படாது; ஏனெனில் அவர் நிராகரிப்பாளர் என்பதே மிகச் சரியான கருத்தாகும். அவர் தொழுகையை விட்டது, அலட்சியத்தின் காரணமாகவோ, அல்லது கட்டாயம் என்பதை நிராகரித்ததனாலோ இருக்கலாம். ஐவேளைத் தொழுகை கடமை என்பதை நிராகரித்தவரால் அறுக்கப்பட்டதையும் உண்ணுவது அனுமதிக்கப்படாது; அவர் தொழுதாலும் சரியே. ஆனால், அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் புதியவராக இருப்பதால் அதனை அறியாதவராக இருந்தால் அது விதிவிலக்காகும்.
முஸ்லிம் அல்லது கிதாபியால் அறுக்கப்பட்டதை, அது எவ்வாறு அறுக்கப்பட்டது? அதற்கு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா? இல்லையா? என்பதைக் கேட்க வேண்டியதில்லை. மேலும், இது மார்க்கத்தில் அளவுகடந்து செல்வதாகும். நபி (ஸல்) அவர்கள் யூதர்கள் அறுத்ததை உண்டார்கள், ஆனால் அவர்களிடம் கேட்கவில்லை.
புஹாரி போன்ற கிரந்தங்களில், ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சிலர் "எங்களுக்கு சிலர் இறைச்சி கொண்டு வருகிறார்கள், அதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா? அல்லது இல்லையா? என்பதை நாங்கள் அறியமாட்டோம்" என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நீங்கள் அதில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அதை உண்ணுங்கள்' என்று கூறினார். ஆஇஷா (ரலி) அவர்கள், அவ்வாறு கேட்டவர்கள் சமீபத்தில் குஃப்ரிலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள். என்று கூறுகின்றார்கள் இங்கு, புசிக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏவினார்கள், அதனை கொண்டு வந்தவர்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் தெரியாமலிருந்தாலும்; ஏனெனில் அவர்கள் சமீபத்தில் குஃப்ரிலிருந்து இஸ்லாத்தில் நுழைந்தவர்கள். (40) ஆதாரம் : புஹாரி, அறுக்கப்படுபவை எனும் பாடம், கிராமப்புற அரபிகளின் அறுத்த பிராணிகள் போன்றவை என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 5507.
மூன்றாவது நிபந்தனை : அறுக்கும் நோக்கத்துடன் அறுத்தல். அல்லாஹ் கூறுகின்றான் : (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (அல்மாஇதா : 3). அறுத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட செயல் ஆகும், இதற்கு நிய்யத் (எண்ணம்) தேவைப்படும். அறுத்தல் நோக்கமின்றி அறுத்தால், அந்த அறுக்கப்பட்ட மிருகம் ஹலால் ஆகாது. உதாரணமாக, ஒரு மிருகம் தன்னை தாக்க வந்தால், தன்னை பாதுகாத்துக்கொள்ள மட்டும் அதை அறுத்தால், அது ஹலால் ஆகாது.
நான்காவது நிபந்தனை: அறுத்துப் பலியிடல் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருக்கக்கூடாது. அது அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருந்தால், அந்த அறுக்கப்பட்டது ஹலால் ஆகாது. உதாரணமாக, சிலை, சமாதி, அரசர், தந்தை போன்றவர்களை மகத்துவப்படுத்துவதற்காக அறுத்தால், அது ஹராம் ஆகும். அல்லாஹ் கூறுகின்றான்: (தானாக) செத்தது உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) தடுக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து பின்வரும் வசனம் வரை பார்க்கவும் : (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, அடையாள சின்னம், சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை (அல்மாஇதா : 3).
ஐந்தாவது நிபந்தனை: அதற்கு அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு பெயரைச் சொல்லக் கூடாது. உதாரணமாக: நபியின் பெயரால், அல்லது ஜிப்ரீல், அல்லது இன்னாரின் பெயரால் எனக் கூறல். அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு பெயரைச் சொன்னால் அது அனுமதிக்கப்படாது, அல்லாஹ்வின் பெயரை அதனுடன் சேர்த்தாலும் கூட; ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(தானாக) செத்தது உங்களுக்கு தடுக்கப்பட்டுவிட்டது.” பின்வரும் வசனம் வரை பார்க்கவும்: “அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவை” (அல்மாஇதா : 3). ஆதாரபூர்வமான ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் : “எவரேனும் ஒருவர் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்" (41). (41) முஸ்லிமில், 'கிதாபுஸ் ஸுஹ்த்' எனும் பாடத்தில், 'ரியா' (முகஸ்துதி) தடை செய்யப்படுவது பற்றிய தலைப்பில், அபூஹூறைரா (ரழி) அவர்கள் மூலம் ஹதீஸ் எண் 2985 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறாவது நிபந்தனை: அல்லாஹ்வின் நாமத்தை அதற்கு கூறுதல், அதாவது அறுக்கும் போது «பிஸ்மில்லாஹ்» என்று கூறுதல்; அல்லாஹ் கூறுகின்றான்: “ஆகவே, நீங்கள் அவனுடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள்;.” (அல் அன்ஆம் : 118) நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : ''இரத்தம் பாயச் செய்யும் (அறுக்கப்பட்ட) மற்றும் அதற்கு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட பிராணிகளை உண்ணுங்கள்.'' இந்த ஹதீஸை புஹாரி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்[42]. (42) ஆதாரம் : புஹாரி, ஷரிகா பற்றிய பாடம், ஆடுகளைப் பங்குவைத்தல் எனும் தலைப்பு, ஹதீஸ் எண் 2488, முஸ்லிம், உழ்ஹியா பற்றிய பாடம், பற்களைத் தவிர இரத்தத்தை ஓட்டும் எதைக் கொண்டும் அறுக்கப்பட்ட எதையும் சாப்பிட அனுமதியுள்ளது என்பது பற்றிய பாடம், ஹதீஸ் எண் 1968, அறிவிப்பவர் : ராஃபிஉ பின் குதைஜ் (ரழி) அவர்கள்.
அல்லாஹ்வின் திருநாமம் அதன் மீது கூறப்படாவிட்டால், அது அனுமதிக்கப் படாது; இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : “அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றிலிருந்து புசிக்காதீர்கள்.” (அல் அன்ஆம்: 121) அல்லாஹ்வின் பெயரைக் கூற, மறதியாக அல்லது அறியாமையில் விட்டாலும், அல்லது அறிந்தும் வேண்டுமென்றே விட்டாலும் அதில் வேறுபாடு கிடையாது.(43) ஏனெனில் இந்த வசனம் பொதுவாகவே உள்ளது, மேலும் நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் பெயர் கூறுவதை அனுமதிக்கான நிபந்தனையாகக் கூறியுள்ளார்கள், நிபந்தனை என்பது, மறதியாலோ, அறியாமையாலோ நீங்குவதில்லை, எவ்வாறு, மறதியினலோ, அறியாமையினாலோ இரத்தம் பாயவைக்காமல் உயிரை எடுத்தால், அது அனுமதிக்கப்படமாட்டாதோ, அதேபோல பெயர் கூறுவதை விட்டாலும், அனுமதிக்கப்படமாட்டாது. ஏனெனில் இரண்டிலும் ஒரே வார்த்தை, ஒரே நபரிடமிருந்து வெளிப்படுகின்றது. எனவே வேறுபாடுகாட்ட முடியாது. (43) விரிவாக அறிந்து கொள்ள மூல நூலைப் பார்க்கவும் பக்கம் (71-77) [ஆசிரியர்].
அறுப்பவர், பிஸ்மியை மொழியமுடியாத ஊமையராக இருந்தால், அதை உணர்த்தும் விதத்தில் சைகை செய்வது போதுமானதாக இருக்கும்; ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்: “ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்!” (அத்தஃகாபுன் : 16).
எழாவது நிபந்தனை: அறுப்பது, இரத்தத்தை ஓட்டும் கூரிய பொருட்களாகிய, இரும்பு, கல், கண்ணாடி போன்றவற்றைக் கொண்டாக இருக்கவேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட நிலையில், இரத்தத்தைப் பாய்த்து ஓடச் செய்துவிட்டால், நீங்கள் சாப்பிடுங்கள். ஆனால் அது பற்கள் அல்லது நகங்கள் அல்லாதிருக்க வேண்டும். இதற்கான விளக்கத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: பற்கள் எலும்பாகும், நகங்கள் எத்தியோப்பியர்களின் கத்திகளாகும்.'' அனைத்து ஹதீஸ் அறிஞர்களும் இதனை அறிவித்துள்ளனர். (44) புஹாரியின் இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு உள்ளது : பல்லும் நகமும் தவிர; பல் எலும்பாகும், நகம் ஹபஷாக்களின் கத்தியாகும்". (45). (44) ஆதாரம் : புஹாரி, ஷரிகா பற்றிய பாடம், ஆடுகளைப் பங்குவைத்தல் எனும் தலைப்பு, ஹதீஸ் எண் 2488, முஸ்லிம், உழ்ஹியா பற்றிய பாடம், பற்களைத் தவிர இரத்தத்தை ஓட்டும் எதைக் கொண்டும் அறுக்கப்பட்ட எதையும் சாப்பிட அனுமதியுள்ளது என்பது பற்றிய பாடம், ஹதீஸ் எண் 1968, அபூதாவூத், உழ்ஹியா பற்றிய பாடம், மர்வா எனும் கல்லால் அறுக்கப்பட்ட பிராணி என்ற பாடம், ஹதீஸ் எண் 2821, திர்மிதி, வேட்டைகள் பற்றிய பாடம், மூங்கில் போன்றவற்றால் அறுக்கப்பட்டவை பற்றிய தலைப்பு, ஹதீஸ் எண் 1491, நஸாஈ, உழ்ஹியா பற்றிய பாடம், பற்களால் அறுத்தல் என்ற தலைப்பு, ஹதீஸ் எண் 4409, இப்னு மாஜா, அறுப்புப் பிராணிகள் என்ற பாடம், அறுப்பதற்காகப் பயன்படுத்தப்படுபவை எனும் தலைப்பு, ஹதீஸ் எண் 3178, அஹ்மத் (3/463) அறிவிப்பவர் : ராஃபிஉ பின் குதைஜ் (ரழி) அவர்கள் (45) ஆதாரம் : புஹாரி, அறுப்புப் பிராணிகள் என்ற பாடம், ஒரு கூட்டத்தாரின் ஒட்டகம் கட்டுக்கடங்காமல் ஓட, யாராவது அம்பு எய்து கொன்றால் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில், ஹதீஸ் எண் 5544.
புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பின்வருமாறு உள்ளது : கஃப் இப்னு மாலிக் (ரழி) அவர்களின் ஒரு அடிமை பெண் அவர்களுக்குச் சொந்தமான ஆடுகளை ஸிலஃ எனும் இடத்தில் மேய்த்துக் கொண்டிருந்தாள். அவள் அந்த ஆடுகளில் ஒன்றை இறக்கப் போகும் நிலையில் கண்டாள். உடனே ஒரு கல்லை உடைத்து அதைக் கொண்டு அதை அறுத்தாள். இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணும்படி உத்தரவிட்டார்கள். (46) ஆதாரம் : புஹாரி, அறுப்புப் பிராணிகள் என்ற பாடம், மூங்கில், மர்வா எனும் கல் மற்றும் இரும்பு போன்ற, இரத்தத்தை ஓட்டும் பொருட்கள் பற்றிய தலைப்பு, ஹதீஸ் எண் (5501).
அதன் உயிர் கூரிய கருவி ஒன்றால் அறுக்கப்படாமல் வேறு முறையில் பறிக்கப்படுமானால், அது ஹலால் ஆகாது. உதாரணமாக: அதை கழுத்து நெறித்து அல்லது மின்சாரம் போன்றவற்றால் அதனை மயக்கிக் கொல்லல். அதன் உணர்வு போகும் வரை அவ்வாறு செய்துவிட்டு, அதன் பின்னர் அதில் உயிர் இருக்கும் நிலையிலேயே அதனை ஷரீஆ முறைப்படி அறுத்தால், அது ஹலால் ஆகும்; அல்லாஹ் கூறுகின்றான்: “(தானாக) செத்தது உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) தடுக்கப்பட்டுவிட்டது.” தொடர்ந்து பின்வரும் வசனம் வரை பார்க்க: கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்று மீதமிருப்பது ஆகியவை உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) தடுக்கப்பட்டுவிட்டது. (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (அல்மாஇதா : 3).
தொடர்ந்தும் உயிரோடு இருப்பதற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன:
அவற்றில் ஒன்று: அது நகர வேண்டும்.
இரண்டாவது: அதில் வலுவாக சிவப்பு இரத்தம் ஓடவேண்டும்.
எட்டாவது நிபந்தனை: இரத்தத்தைப் பாய்ச்சுதல், அதாவது: அறுத்து இரத்தம் ஓட விடுதல்; நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ''அறுக்கும் போது ரத்தம் பாயச் செய்து, அதற்கு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால் அதை உண்ணுங்கள்'' (47). (47) இதன் மேற்கோள் முன்னர் கூறப்பட்டது பக்கம் : 29.
பின்னர், அந்த விலங்கு பிடிக்க முடியாததாக இருந்தால், உதாரணமாகத், தப்பியோடி, கிணறு அல்லது குகை போன்ற இடத்தில் விழுந்தவை. அதன் உடலின் எந்த இடத்திலிருந்தும் இரத்தத்தை ஓட்டினால் போதும். ஆனால், அதன் உயிரை விரைவாக எடுத்து விடக்கூடிய முறையைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது; ஏனெனில் இது விலங்கிற்கு அதிக சுகமானது, குறைந்த வேதனையையும் தரும்.
அந்தப் பிராணி பிடிக்கமுடியுமானதாக இருந்தால், அதன் பிடரியில் இருந்து, தாடைகள் வரை உள்ள பகுதியில் இருந்து இரத்தம் ஓடச் செய்வது கட்டாயமாகும். அதாவது, தொண்டையைச் சுற்றியுள்ள கனமான இரு இரத்த நாளங்களையும் வெட்டவெண்டும்.
அதன் முழுமையாவது: அதாவது, மூச்சுக் குழாய் -அதாவது மூச்சின் வழி- மற்றும் உணவுக்குழாய் -அதாவது உணவு மற்றும் பானத்தின் வழி- ஆகியவற்றை வெட்ட வேண்டும்; இதனால் உயிரினத்தின் நிலைத்தன்மைக்கான மூலப்பொருள் -அதாவது இரத்தம்- மற்றும் அதன் வழி -அதாவது மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாய்- நீங்கும். ஆனால், இரத்த நாளங்களை மாத்திரம் வெட்டினாலும், அந்த அறுப்புமுறை ஹலால் ஆகும்.
ஒன்பதாவது நிபந்தனை: அறுக்கப்படும் பிராணி ஷரீஅத் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், அனுமதிக்கப்படாதவை இரண்டு வகைப்படும்:
ஒன்று: அல்லாஹ்வின் உரிமைக்காக ஹராமாக்கப்பட்டவை, உதாரணமாக, ஹரமில் வேட்டையாடல், மற்றும் இஹ்ராமில் இருந்துகொண்டு வேட்டையாடல். இவை அறுக்கப்பட்டாலும் ஹலால் ஆகமாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; (அல்மாஇதா: 1). மேலும் அல்லாஹ் கூறுகிறான் : உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. (அல் மாஇதா : 96)
இரண்டாம் வகை: படைப்பின் உரிமைக்காகத் தடைசெய்யப்பட்டவை, எடுத்துக்காட்டாக, பறிக்கப்பட்டது, திருடப்பட்டது. அதை பறித்தோரும் திருடர்களும் அறுத்தால், அது அனுமதிக்கப்படுமா என்பது பற்றிய இரண்டு கருத்துக்கள் உலமாக்களிடையே உள்ளன. அவற்றையும் அவற்றின் ஆதாரங்களையும் மூலத்தில் பாருங்கள், பக்(88-90).
* * *
பகுதி ஒன்பது
மிருகங்களை அறுத்தலின் ஒழுக்கங்கள்
மிருகங்களை அறுத்து உண்ணுவதற்காக சில ஒழுங்குகள் உள்ளன. அவை பேணப்படவேண்டும். அறுப்பு ஹலால் ஆக அவை அவசியமில்லை, அவையின்றியும் உண்ணலாம், அவற்றில் சில:
1- அறுக்கும் போது கிப்லாவை முன்னோக்குதல்.
2- மிருகங்களை அறுப்பதில் அழகிய முறையில் நடந்துகொள்ளல். அதாவது, கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு, அதன் அறுப்பிடத்தில் வலிமையுடன் மற்றும் வேகமாகச் செலுத்துதல் ஆகும். இது கட்டாய ஒழுங்குகளில் ஒன்றாகும் எனவும் கூறப்பட்டுள்ளது; நபி (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்றின் வெளிக்கருத்து அதையே உணர்த்துகின்றது: “நிச்சயமாக அல்லாஹ், அனைத்தையும் திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொன்றால், நன்றாகக் கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் நன்றாக அறுங்கள். உங்களில் ஒருவர் தங்களது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். (அறுத்த பின்னர்) பிராணியை ஆறுதலடைய வைக்கட்டும்.” இந்த ஹதீஸை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்[48] இந்தக் கருத்தே சரியானது. (48) முஸ்லிம், வேட்டையாடல் பற்றிய பாடம், அறுத்தல் மற்றும் கொலை செய்யும் போது அழகிய முறையைக் கடைப்பிடுக்குமாறு ஏவுதல் என்ற தலைப்பு, ஹதீஸ் எண் 1955. அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரழி) அவர்கள்.
3. ஒட்டகங்களை “நஹ்ர் முறையிலும், மற்றவற்றை “தப்ஹ்” முறையிலும் அறுப்பது. அதாவது, ஒட்டகங்களை அதன் இடது காலை கட்டி நின்ற நிலையில் அறுக்கவேண்டும். அது கடினமாக இருந்தால், அவற்றை அமர்ந்த நிலையில் அறுக்கலாம். மற்றவற்றை அதன் இடது பக்கத்தில் படுக்க வைத்து அறுக்க வேண்டும். அறுப்பவர் இடதுகை பழக்கமானவராக இருந்தால், அறுப்பதற்கு எளிதாகவும், அறுக்கப்படும் மிருகத்திற்கும் சௌகரியமாகவும் இருந்தால், அவற்றை வலது பக்கத்தில் வைத்து அறுக்கலாம்.
அதனைக் கட்டுப்படுத்தி வைக்கும் பொருட்டு, கால்களை அதன் கழுத்தில் வைப்பது சுன்னத்தாகும்; ஆனால் அதன் மீது அமர்ந்து அதன் கால்களை பிடிப்பதற்கு சுன்னாவில் ஆதாரம் இல்லை.
கைகளைப் பிடிக்காமல் விடுவதன் பயன்களில் ஒன்று, அது அசைந்து, தடுமாறும் போது இரத்த ஓட்டம் அதிகரிப்பதாகும் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
4- இரு இரத்தக் குழாய்களுக்கும் மேலதிகமாக, தொண்டை மற்றும் உணவுக்குழலையும் துண்டித்தல், அறுத்தலின் நிபந்தனைகளில் எட்டாவது நிபந்தனையைப் பாருங்கள்.
5- கத்தியைக் கூர்மைப்படுத்தும் போது விலங்கினை விட்டும்மறைத்து வைக்க வேண்டும், அது அறுக்கப்படும் நேரத்தில் மட்டுமே கத்தியை காண வேண்டும்.
6- பிஸ்மி கூறியதன் பின் தக்பீர் கூறுதல்.
7. உழ்ஹிய்யா அல்லது அக்கீகாவைப் பலியிடும் போது, துவக்கத்தில் 'பிஸ்மில்லாஹ், அல்லாஹு அக்பர்' என்று கூறிய பின்னர், அதற்கான நபரின் பெயரைச் சொல்லி, அல்லாஹ்விடம் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்வது. "பிஸ்மில்லாஹ், அல்லாஹு அக்பர், யா அல்லாஹ்! இது உன்னிடமிருந்தே, உனக்கே உரியது; எனக்காக அறுக்கின்றேன்(அது அவருக்காக இருந்தால்) அல்லது இன்னாருக்காக அறுக்கின்றேன் (அது வேறொருவருக்காக இருந்தால்), யா அல்லாஹ்! என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக (அது அவருக்காக இருந்தால்) அல்லது இன்னாரிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! (அது வேறொருவருக்காக இருந்தால்)" என்று கூறுவார்.
* * *
பகுதி பத்து
மிருகங்களை அறுத்தலில் வெறுக்கப்பட்டவை:
அறுக்கும் போது தவிர்க்கப்படவேண்டிய வெறுக்கப்பட்ட சில அம்சங்கள் உள்ளன:
1- மொட்டையான, கூர்மையற்ற கருவி கொண்டு அறுத்தல். அவ்வாறு அறுப்பது ஹராம் என்று கூறப்பட்டுள்ளது. அதுவே சரியான கருத்தாகும். .
2- மிருகம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அறுக்கும் கருவியை தீட்டுதல்
3- ஒரு மிருகம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மற்றையதை அறுத்தல்
4. அறுத்துப் பலியிடப்பட்ட பிறகு, உயிர் நீங்குவதற்கு முன் அதற்கு வேதனை ஏற்படுத்தும் செயல்களைச் செய்வது, உதாரணமாக: அதன் கழுத்தை முறிப்பது, தோலுரிப்பது, அல்லது அதன் உறுப்புகளை வெட்டுவது போன்றவை செய்யப்படக்கூடாது. இது ஹராம் என்றும் கூறப்படுகிறது. அதுவே சரியான கருத்தாகும்.
«உழ்ஹிய்யா மற்றும் அறுத்தல் சட்டங்கள்» என்ற புத்தகத்திலிருந்து நாங்கள் சுருக்க விரும்பியதை இதுவரை முடித்துள்ளோம். இதனையும் அதன் மூலத்தையும் கொண்டு பயனளிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். இது ஹிஜ்ரி வருடம் 1400 துல்ஹஜ் 13 ஆம் தேதி புதன்கிழமை மாலை முடிக்கப்பட்டது.
உலகைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். சாந்தியும் சமாதானமும் எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரது கிளையார், தோழர் அனைவர் மீதும் உண்டாவதாக.
* * *
Related books
All books
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்55 மொழிகள்அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்
இந்த நூல் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய சட்டங்களை அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் விளக்குகிறது; ஹஜ் மற்றும் உம்ராவின் கடமைகள், இஹ்ராம் நிலையில் தடை செய்யப்பட்ட செயல்கள், மஸ்ஜிதுந்-நபவீயை ஜியாரத் செய்வதற்கான ஒழுக்க நெறிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த வழிபாட்டு சடங்குகளில் உள்ள பித்அத்திலிருந்து எச்சரிக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை ஏற்றுநடப்பதன் அவசியம் மற்றும் அதை மறுப்பவர் இறைநிராகரிப்பாளராகக் கொள்ளப்படல்23 மொழிகள்நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை ஏற்றுநடப்பதன் அவசியம் மற்றும் அதை மறுப்பவர் இறைநிராகரிப்பாளராகக் கொள்ளப்படல்
தொகுப்பு: அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன். முன்னுரை புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. நல்ல முடிவு பயபக்தியுடையோருக்குரியதாகும். சாந்தியும், சமாதானமும் அவனது அடியாரும், அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட தூதருமாகிய, எங்கள் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், தமது இரட்சகனின் வேதத்தையும், தமது நபி வழிமுறையையும் பின்வந்த சமூகத்தினருக்கு மிக்க அமானிதத்துடனும், திறம்படவும், சொற்களையும், அர்த்தங்களையும் சரியாகப் பாதுகாத்த வண்ணமும்…
காலை, மாலையில் ஓத வேண்டிய வேண்டிய திக்ருகள்.57 மொழிகள்காலை, மாலையில் ஓத வேண்டிய வேண்டிய திக்ருகள்.
அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்). "(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும்…
رسول الإسلام محمد صلى الله عليه وسلم81 மொழிகள்محمدرسول الإسلام محمد صلى الله عليه وسلم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்(ஆரம்பிக்கிறேன்) இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதில் இஸ்லாத்தின் தூதர் முஹம்மத்[1] (ஸல்) அவர்களின்; பெயர்,பரம்பரை,பிறந்த நகர் திருமணம், இறைத்தூதுத்துவம் அவர்கள்; அழைத்த விடயங்கள்,நபித்துவத்திற்கான அத்தாட்சிகள்,அவர்களின் ஷரீஆ சட்டதிட்டங்கள் போன்ற விடயங்களுடன் அவர்களின்; எதிரிகளின் நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தியிருக்கிறேன் [1]இப்புத்தகத்தின் மொழிபெயர்பை கருத்திற் கொண்டு அர்ரஸூலு முஹம்மத் (இறைத்தூதர் முஹம்மத்)என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுளேன். 1-அவரின் பெயர்,பரம்பரை, பிறந்து வளர்ந்த நகர் இஸ்லாத்தின் தூதர் முஹம்மத்…