Skip to content

அல்லாஹ்வுக்கு எந்த இணையையும் ஏற்படுத்த மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி வழங்குங்கள்.

பத்ரில் கலந்து கொண்ட ஒருவரான, மேலும், அகபா இரவில் நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகளில் ஒருவரான, உபாதா இப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்கள் தம்மைச் சூழாக இருக்கும் நிலையில் இவ்வாறு கூறினார்கள் :

அல்லாஹ்வுக்கு எந்த இணையையும் ஏற்படுத்த மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி வழங்குங்கள். மேலும், உங்களது பிள்ளைகளைக் கொலை செய்யமாட்டீர்கள் என்றும், மேலும், உங்கள் கரங்கள் மற்றும் கால்களுக்கு இடையில் இருந்து இட்டுக்கட்டி, அவதூறுகளைக் கொண்டு வரமாட்டீர்கள் என்றும், நன்மையில் மாறு செய்ய மாட்டீர்கள் என்றும் (எனக்கு உறுதிமொழி வழங்குங்கள்) உங்களில் யார் (இதை) நிறைவேற்றுகின்றாரோ, அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. இவற்றில் ஏதாவதொன்றை யாராவது செய்து, பின்பு அல்லாஹ் அவரை மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவர். அல்லாஹ் நாடினால், அவரை மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். (இவ்வாறு நபியவர்கள் கூறிய பின்னர்) நாம் அதற்கு உறுதிமொழி வழங்கினோம்.

«بَايِعُونِي عَلَى أَلَّا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ» فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

உபாதா இப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள், மாபெரும் பத்ர்ப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். மேலும், நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வருவதற்கு முன்னர், மக்காவில் இருக்கும் போது, மினாவில் உள்ள அகபா எனும் இடத்தில் ஓர் இரவு நேரம், நபியவர்களுக்கு உதவுவதாக வாக்களிக்க வந்த தமது சமுதாயத்தினருக்குத் தலைவராகவும் இருந்தவர். அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டிருந்த நிலையில் சில விடயங்களுக்கு உறுதிமொழி அளிக்குமாறு வேண்டினார்கள். முதலாவது : அல்லாஹ்வை வணங்கும் விடயத்தில் எதையும் - அது மிகக் குறைவானதாக இருப்பினும் - இணைவைக்காமல் இருத்தல். இரண்டாவது : திருடக்கூடாது. மூன்றாவது : விபச்சாரம் எனும் மானக்கேடான பாவத்தை செய்யக்கூடாது. நான்காவது : தமது ஆண்பிள்ளைகளை வறுமைக்குப் பயந்தோ, பெண்பிள்ளைகளை அவமானத்திற்குப் பயந்தோ கொலை செய்யக் கூடாது. ஐந்தாவது : தமது கைககள் மற்றும் கால்களால் இட்டுக்கட்டி, பொய்களைக் கொண்டுவராமல் இருத்தல். ஏனெனில், பெரும்பாலான செயல்கள் இவ்விரு உறுப்புக்கள் மூலமாகவே நடக்கின்றன. ஏனைய உறுப்புக்கள் அதனுடன் கூட்டுச் சேர்ந்தாலும் சரியே. ஆறாவது : நல்லவிடயங்களில் நபி (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்யக்கூடாது. அவர்களில் யார் இந்த உறுதிமொழியில் உறுதியாக இருந்து, அதைப் பேணிக்கொள்கின்றாரோ, அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. கூறப்பட்டவற்றில் - இணைவைப்பல்லாதவற்றை - யாராவது செய்து, அதற்காக இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால், அது அவருக்கான குற்றப்பரிகாரமாகும். அதைக் கொண்டு குற்றம் நீங்கிவிடும். அவற்றில் ஏதாவதொன்றை யாராவது செய்து, பின்பு அல்லாஹ் அவரை மறைத்து விட்டால், அவரது விடயம் அல்லாஹ்விடம் உள்ளது. அல்லாஹ் நாடினால், அவரை மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். (அப்போது) சமூகமளித்திருந்தவர்கள் அனைவரும் அதற்கு உறுதிமொழி அளித்தார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

ஜிஹாத் அவர்கள் மீது விதியாக்கப்படுவதற்கு முன்னர், முதலாம் அகபா உடன்படிக்கை உள்ளடக்கியிருந்த விடயங்களைத் தெளிவுபடுத்தல்.

ஸின்தீ அவர்கள் கூறுகின்றார்கள் : 'நல்ல விடயங்களில்' என்ற நபியவர்களது வார்த்தையைப் பொறுத்தவரை, அவர்களது கட்டளைகள் அனைத்துமே நல்லவைதான். அதற்கு மாற்றமான ஒன்று நடக்கவே வாய்ப்பில்லை (என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.) எனவே, 'நல்ல விடயங்களில்' என்ற நபியவர்களது வார்த்தை, கட்டுப்படுதல் கடமை என்பதற்கான காரணத்தையும், நன்மையற்ற விடயங்களில் படைப்புக்களுக்குக் கட்டுப்பட முடியாது என்பதையும், உறுதிமொழியின் (பைஅத்தின்) போது கட்டுப்படுதல் என்பது நல்லவற்றில் தான் என்ற நிபந்தனையை இடுவது கட்டாயம் என்பதையும் உணர்த்தவாகும்.

முஹம்மத் இப்னு இஸ்மாஈல் மற்றும் பலர் கூறுவதாவது : பிள்ளைகளைக் கொலை செய்வதைக் குறித்துக் காட்டப்பட்டுள்ளமைக்கான காரணம், அது கொலையாகவும், உறவுகளைத் துண்டிப்பதாகவும் இருப்பதாகும். எனவே, அதைத் தடுப்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. பெண்பிள்ளைகளை உயிருடன் புதைத்தல், ஆண்மக்களை வறுமையைப் பயந்து கொலை செய்தல் ஆகியவை அவர்களிடம் பரவலாகக் காணப்பட்டன. அல்லது அவர்கள் குறிப்பாகச் சொல்லப்பட்டமைக்கான காரணம், அவர்கள் தம்மைக் காத்துக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதாகும்.

நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸ் உணர்த்தும் பொதுக் கருத்து, 'நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான்' எனற அல்குர்ஆனிய வசனத்தினால் வரையறுக்கப்படுகின்றது. ஏனெனில், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன், அதற்காகக் கொலைசெய்யப்பட்டால், அவ்வாறு கொலை செய்யப்படுவது அதற்கான குற்றப் பரிகாரமாக அமையமாட்டாது.

காழி இயாழ் அவர்கள் கூறுகின்றார்கள் : குற்றவியல் தண்டனைகள், பாவங்களுக்கான குற்றப்பரிகாரம் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

மேற்கோள்கள்

புஹாரி (1/ 12) (18).

முஸ்லிம் (3/ 1333) (1709).

மேலதிகமாக (2)

إرشاد الساري لشرح صحيح البخاري (1/ 99).

عمدة القاري شرح صحيح البخاري (24/ 277).