பதில் : அல்லாஹ்வை நம்புதல். அது பின்வரும் விடயங்களை உள்ளடக்குகிறது :
- அல்லாஹ் மாத்திரமே உன்னை படைத்து, உனக்கான வாழ்வாதாரத்தை தருபவன் என்பதையும், அவன் ஒருவன் மாத்திரமே படைப்பினங்களின் உரிமையாளன்; என்றும் அவைகளின் விவகாரங்களை திட்டமிடுபவன் என்றும் உறுதியாக நம்புதல் வேண்டும்.
மேலும் அவன்தான் உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன். அவனைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு யாருமில்லை. படைத்தல், ஆணையிடுதல், தீர்ப்பளித்தல் மற்றும் சட்டமியற்றுதல் போன்றன அவனுக்கே உரியன. அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
அல்லாஹ் மகத்தானவன் பெரியவன், பரிபூரணமானவன் புகழனைத்தும் அவனுக்குரியவை என்றும், அவனுக்கு அழகிய திருநாமங்களும் உயர் பண்புகளும் உள்ளன என்றும், அவற்றில் அவனுக்கு நிகரான அவனுக்கு ஒப்பான எதுவும் கிடையாது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
- மலக்குகளை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) :
மலக்குகள் அல்லாஹ்வின் படைப்பாகும். அவர்களை அவன் ஒளியினால் படைத்தான். அவர்கள் அவனை வணங்கி வழிபடவும் அவனின் கட்டளைக்கு முற்றாக அடிபணிந்து நடக்கவுமே படைக்கப்பட்டுள்ளனர்.
அல்லாஹ் கூறுகிறான் :
மாறாக, அவர்கள் அவனுடைய கண்ணியமான அடியார்கள் ஆவார்கள்.
அவர்கள் பேச்சில் அவனை முந்தமாட்டார்கள். (எதிர்த்து பேச மாட்டார்கள்.) இன்னும், அவர்கள் அவனுடைய கட்டளையின்படியே செய்கிறார்கள்.
(அன்பியாஃ : 35).
மேலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்
"வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர்."
(ஆதாரம் : முஸ்லிம்.)
அவர்களுள் ஜிப்ரீல் (அலை) பிரதானமானவர். அவரே வஹியெனும் இறைச்செய்தியை அல்லாஹ்விடமிருந்து நபிமார்களுக்கு கொண்டுவருபவர்.
இன்னும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கப்பட்ட வேதமாகும்.
நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார்.
நீர் (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்பதற்காக .உமது உள்ளத்தில்
தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டது),
(அஷ்ஷுஅராஃ : 192- 195).
- வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) :
அல்லாஹ் தனது தூதர்களுக்கு இறக்கி அருளிய இறைச்செய்தி அடங்கிய நூல்களே வேதங்களாகும். அந்த வகையில்,
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட அல் குர் ஆன்,
நபி ஈஸா (அலை) மீது அருளப்பட்ட இன்ஜீல் வேதம்,
நபி மூஸா (அலை) மீது அருளப்பட்ட தவ்ராத் வேதம்,
நபி தாவூத் (அலை) மீது அருளப்பட்ட ஸபூர் வேதம்,
- இப்ராஹீம் மற்றும் மூஸா அலைஹிமஸ்ஸலாம் இருவருக்கும் வழங்கப்பட்ட ஏடுகள் போன்றவை இதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
- இறைத்தூதர்களை நம்புதல் :
இறைத்தூதர்கள் என்போர் அல்லாஹ் தனது அடியார்களுக்கு கற்றுகொடுப்பதற்காகவும், அவர்களுக்கு நன்மை மற்றும் சுவர்க்கம் குறித்து நன்மாராயம் கூறவும், தீமை மற்றும் நரகம் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் அவனின் புறத்திலிருந்து அனுப்பிய உத்தம மனிதர்களைக் குறிக்கும்,
அவர்களுள் மிகவும் சிறப்புக்குரியோர் (உலுல் அஸ்ம்) திட உறுதிபூண்டோர் என்போர் ஆவர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :
நூஹ் அலைஹிஸ்ஸலாம்,
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்,
மூஸா அலைஹிஸ்ஸலாம்,
ஈஸா அலைஹிஸ்ஸலாம்,
- முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
- இறுதி நாளை விசுவாசம் கொள்ளுதல் (மறுமை நாளை நம்புதல்) :
அதாவது மரணத்தின் பின்னுள்ள மண்ணறை வாழ்வு, மற்றும் மறுமை நாள், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபட்டு விசாரணை செய்யப்படும் நாள் போன்றவற்றை இது குறிக்கும். அந்நாளில் சுவர்க்கவாதிகள் அவர்களுக்குரிய தங்குமிடங்களிலும் நரகவாதிகள் அவர்களுக்குரிய தங்குமிடங்களிலும் நிரந்தரமாக தங்கிவிடுவர் என்பதை நம்புவதாகும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.
(ஆல இம்ரான் : 185).
- நன்மை, தீமை இறைவிதியின் படியே நடக்கும் என்பதை ஈமான் கொள்ளுதல் :
விதி என்பது இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்தையும் முழுமையாக அல்லாஹ் நன்கறிவான் என்றும், பிரபஞ்ச நிகழ்வுகள் குறித்து லவ்ஹுல் மஹ்பூல் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் பதிந்து வைத்துள்ளான் என்றும், அவன் இவ்வாறான ஒழுங்கு இருக்க வேண்டுமென நாடி அதனை உருவாக்கினான் என்றும் நம்புவதாகும்.
நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.
(அல்கமர் : 17)
கழாகத்ர் எனும் நம்பிக்கையானது நான்கு படித்தரங்களை கொண்டுள்ளது. அவைகள் பின்வருமாறு :
முதலாவது : அல்லாஹ்வின் அறிவுபற்றியதாகும். அவற்றில் இப்பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகள் அதாவது அவை நிகழ்வதற்கு முன்னும் நிகழ்ந்த பின்னரும் அது குறித்த அவனின் முன்னறிவை குறிப்பிடலாம்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் :
நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம்தான் மறுமையைப் பற்றி (அது எப்போது நிகழும் என்ற) அறிவு இருக்கிறது. அவன்தான் மழையை இறக்குகிறான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகிறான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
(லுக்மான் : 34).
இரண்டாவது : இவற்றை அல்லாஹ் லவ்ஹுல் மஹ்பூலில் ஆரம்பத்தில் எழுதி விட்டான். அதாவது நடந்தவை நடக்கவிருப்பவை யாவும் அதில் எழுதப்பட்டுவிட்டன.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. கடலிலும், தரையிலும் இருப்பவை அனைத்தையும் அவன் அறிந்திருக்கின்றான். மரத்திலிருந்து எந்த இலையும் அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் எந்த விதையையும் அவன் அறியாமல் இல்லை. பசுமையான மற்றும் உலர்ந்த அனைத்துமே தெளிவான ஓர் ஏட்டில் பதிக்கப்பட்டிருக்கின்றன.
(அல் அன்ஆம் : 18).
மூன்றாவது : எல்லா விடயங்களும் அவனின் நாட்டபடியே நிகழும். அவனிடமிருந்தும் படைப்பினங்களிடமிருந்தும் நிகழ்பவை யாவும் அவனின் நாட்டப்படியே நிகழ்கிறது.
அடியானுக்கு தெரிவு உண்டு, அவனுக்கு நாட்டமும் உண்டு, விருப்பமும் உண்டு, ஆனால் இந்த நாட்டமும் இந்த விருப்பமும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் விருப்பத்திற்குப் பின்னரேயன்றி நிகழாது.
உங்களில் (நேர் வழியில்) நிலைத்திருக்க நாடுகிறவருக்கு (இது ஒரு அறிவுரையாகும்.)
அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நீங்கள் நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள். 29
(தக்வீர் : 28-29).
நான்காவது : அனைத்து படைப்பினங்களையும் அல்லாஹ்வே படைத்தான் என்றும் அவற்றை அவன் படைக்கும் போது அவற்றின் தனித்தன்மைகளையும் குணங்களையும் அங்க அசைவுகளையும், அவற்றின் அனைத்து விடயங்ளையும் அவனே படைத்தான் என்பதையும் உறுதியாக நம்புதல் (ஈமான் கொள்ளுதல்).
அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்.
(அஸ்ஸாப்பாத் : 96).