Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 33 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நிச்சயமாக அல்லாஹ் ஒரு முஃமினுக்கு அவன் செய்த எந்த நற்செயலிலும் அநீதி இழைக்க மாட்டான்;.(கூலி வழங்காது விட்டுவிடமாட்டான்) அதன் காரணமாக அவனுக்குரிய கூலி இவ்வுலகில் வழங்கப்பட்டு, மறுமையிலும்; அதற்கான வெகுமதி கிடைக்கும். காஃபிரைப் பொறுத்தவரை, அவன் இந்த உலகில் அல்லாஹ்வுக்காக செய்த நற்செயல்களுக்கான வெகுமதி அவனுக்கு வழங்கப்படும், அவன் மறுமையை அடையும் போது, அவனுக்கு வெகுமதி அளிக்கக்கூடிய எந்த நன்மையும் இருக்காது.'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது மடங்குகளில் ஒன்றாகும்;. என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே'' என்று கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள்,'(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை'. எனினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உமர் (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல், ஆண்களின் எண்ணிக்கை குறைதல், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்...' என்று பதிலளித்தார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சுவனத்தில் நுழையும் முதல் தரப்பினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்ற இருப்பர். பின்பு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் வானத்தில் கடுமையாக ஒழி வீசக்கூடிய நட்சத்திரத்தின் தோற்றத்தல் இருப்பர். அவர்கள் சலம் கழிக்கவோ, மலம் கழிக்கவோ, உமிழவோ, மூக்கு சிந்தவோ மாட்டார்கள். அவர்களது சீப்புக்கள் தங்கமாகும். அவர்களது வியர்வை கஸ்தூரியாகும். அவர்கள் நறுமணப் புகை போடும் கலசங்கள் நறுமணக் குச்சிகளால் ஆகியிருக்கும். அவர்களது மனைவியர் ஹூருல் ஈன்களாகும். அவர்கள் அனைவரும் ஒரே மனிதரின் தோற்றத்தில் இருப்பார்கள். (அதாவது) தமது தந்தையாகிய, ஆதமின் தோற்றத்தில் வானத்தில் அறுபது முழம் உயரத்தில் இருப்பார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாட்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு காலம் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் ( விதித்தபடி) எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாதிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) மேலும் உங்களில் ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் சொர்க்கவாதிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். எதன் காரணமாக என்று உங்களுக்குத் தெரியுமா? (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியுற முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறுசிலரை நோக்கி) 'உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்க மாட்டீர்களா?' என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறுசிலரிடம், '(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர். ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும் படி உத்தர விட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், '(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது' என்று கூறிவிட்டு, 'நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, 'நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதலாவது (முக்கிய) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!' என்று கூறிவிட்டு, 'நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்' என்பார்கள். (அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று,) 'இப்ராஹீமே! நீங்கள் இறைத் தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவ்வாறே மக்களும் மூஸா (அலை) அவர்களிடம் சென்று, 'மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தனது தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தி யுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள், 'இன்று என் இறைவன் (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவ்வாறே மக்கள் ஈஸா (அலை) அவர்களிடம் சென்று, 'ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் குழந்தையாய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங் கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அப்போது மக்கள் என்னிடம் வந்து 'முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன், பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியணைக்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) ஸஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்குமுன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, 'இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு 'முஹம்மதே! சொர்க்கத்தின் வாயில்களில் வலப் பக்க வாயில் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாயில்களிலும் மக்களுடன் இணைந்து நுழையலாம்' என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் 'மக்காவிற்கும் (யமனிலுள்ள) 'ஹிம்யர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது 'மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.