Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 5 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் 'எங்கள் இரட்சகனே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் 'உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் 'அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன்' என்பான். அவர்கள் 'அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள்மீது என் அன்பை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்' என்று கூறுவான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
யமனில் இருந்து அலி (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட ஒரு தோல்பையில் மண் நீக்கப்பட்டிராத சிறிய ஒரு தங்கக் கட்டியை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபியவர்கள் நால்வருக்குப் பங்குவைத்தார்கள். உயைனா இப்னு பத்ர், அக்ரஃ இப்னு ஹாபிஸ், ஸைத் அல் கைல், ஆகியோருடன், அல்கமா அல்லது ஆமிர் இப்னுத் துபைல் ஆகியோரே அந்த நால்வரும் ஆகும். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'இவர்களை விட இதைப் பெற நாமே தகுதியானவர்களாக இருந்தோம்.' என்று கூறினார். இது நபியவர்களுக்கு எட்டவே, நபியவர்கள், 'நீங்கள் என்னை நம்பமாட்டீர்களா? நான் வானத்தில் இருப்பவனிடம் நம்பிக்கைக்கு உரியவனாக உள்ளேன். காலையிலும், மாலையிலும் வானத்தின் செய்திகள் எனக்கு வருகின்றன.' என்று கூறினார்கள். அப்போது கண்கள் குழிவிழுந்த, கன்னங்கள் உப்பிய, அடர்த்தியான தாடியைக் கொண்ட, தலைமுடி மலிக்கப்பட்ட, கீழாடை வரிந்துகட்டப்பட்டிருந்த, ஒரு மனிதர் எழுந்து, 'அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்' என்று கூறினார். உடனே நபியவர்கள், 'உனக்குக் கேடு உண்டாகட்டும். பூமியில் உள்ளவர்களிலேயே அல்லாஹ்வை அஞ்சுவதற்கு அதிகம் கடமைப்பட்டவனாக நான் இல்லையா?' என்று கேட்டார்கள். பின்பு அந்த மனிதர் சென்றுவிட்டார். அப்போது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வுடைய தூதரே! அவருடைய கழுத்தை வெட்டட்டுமா?' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'இல்லை. அவர் தொழக்கூடியவர்களாக இருக்கலாம்' என்று கூறி விட்டார்கள். அப்போது காலித் இப்னுல் வலித் அவர்கள், 'தொழும் எத்தனையோ பேர், தமது உள்ளத்தில் இல்லாததை நாவினால் பேசுகின்றார்கள்' என்று கூறினார். உடனே நபியவர்கள், 'மக்களுடைய உள்ளங்களை ஆராய்ச்சி செய்துபார்க்குமாறும், அவர்களது வயிறுகளைப் பிளந்து பார்க்குமாறும் நான் ஏவப்படவில்லை.' என்று கூறினார்கள். பின்பு அம்மனிதர் திரும்பிச் செல்வதைப் பார்த்த நபியவர்கள், 'இந்த மனிதரின் சந்ததியில் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவர். ஆனால், அது அவர்களது தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லமாட்டாது. (எறியப்பட்ட அம்பு) வேட்டைப் பிராணியின் உடம்பில் இருந்து (அதைக் கிழித்துக்கொண்டு) வெளியேறுவதைப் போல, இவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிடுவார்கள்.' என்று கூறினார்கள். மேலும், 'அவர்களை நான் அடைந்துகொண்டால், ஸமூத் கூட்டத்தினர் அழிக்கப்பட்டதைப் போன்று, அவர்களை நான் அழித்துவிடுவேன்.' என்று நபியவர்கள் கூறியதாகவும் நான் நினைக்கின்றேன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
(மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை' என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்' என்றும் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேறு யாரை? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒரு ஜனாஸா வைக்கப்பட்டு, அதை மனிதர்கள் சுமந்து விட்டால், அது ஸாலிஹான (நல்ல) ஜனாஸாவாக இருந்தால், 'என்னை முற்படுத்துங்கள்' என்று கூறும். அது நல்லதற்றதாக இருந்தால், 'அதற்கேற்பட்ட கேடே! அதை எங்கு கொண்டு செல்கின்றார்கள்?' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்துமே கேட்கும். அதை மனிதன் கேட்டுவிட்டால், மூர்ச்சையடைந்து விடுவான்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்