Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 72 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.'
சரியானது இதனை இமாம் நஸாஈ குப்ராவில் பதிவு செய்துள்ளார்
அப்போது அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு(தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ழூபி அலைஹிம் வலழ் ழால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். எனவே, இது (இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉ செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலும், அவர் (இமாம்) ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான். மேலும், அவர் (இமாம்) தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் ஸஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ஸஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய சஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வரஹ்ம துல்லாஹி வ பரக்கா துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல் லாஇலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு. (பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் பாராட்டுகளும் வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபீட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.)
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நிச்சயமாக ஒரு (முஸ்லிம்) அடியானுக்கும்; இணைவைப்பிற்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் '.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே! தமது நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ் தளங்களாக ஆக்கிக் கொண்ட கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'.
சரியானது இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸலல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானில் நோன்பையும் நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன். இதற்குமேல் அதிகமாக நான் எதுவும் செய்யவில்லையாயின், இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா? என்று எனக்குக் கூறுங்கள் என வினவினார்'. அதற்கு நபியவர்கள் 'ஆம்!' என்று பதிலளித்தார்கள்' அதற்கு அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக இதற்கு மேலதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன் என்று கூறினார்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை' என்று கூறி, வீட்டிலேயே தொழுது கொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, 'தொழுகை அறிவிப்பு சப்தம் (அதான்) உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்