என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அவன் என்னை நினைவுபடுத்தும் போது நான் அவனோடு உள்ளேன்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அவன் என்னை நினைவுபடுத்தும் போது நான் அவனோடு உள்ளேன். அவன் தனக்குள் என்னை நினைவு படுத்தினால், நான் எனக்குள் அவனை நினைவு படுத்துவேன். அவன் ஒரு கூட்டத்தில் என்னை நினைவுபடுத்தினால், அவர்களை விடச் சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நான் நினைவு படுத்துவேன். அவன் என்னை ஒரு சாண் நெருங்கி வந்தால், நான் அவனை ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னை ஒரு முழம் நெருங்கிவந்தால், நான் அவனை ஒரு பாகம் நெருங்கிவருவேன். அவன் என்னிடம் நடந்துவந்தால், நான் அவனிடம் விரைந்து வருவேன்.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي، وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُ، وَإِنِ اقْتَرَبَ إِلَيَّ شِبْرًا، تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنِ اقْتَرَبَ إِلَيَّ ذِرَاعًا، اقْتَرَبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً».
அல்லாஹ் கூறுவதாக நபிகள் (ஸல்) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்: என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அதாவது அருளை, பாவமன்னிப்பை எதிர்பார்த்தல் போன்று, என்னுடைய அடியான் என்னைப் பற்றி நினைக்கும் விதத்திலேயே நான் அவனோடு நடந்து கொள்வேன். நன்மையாகவோ வேறு எதுவாகவோ இருந்தாலும், அவன் என்னிடமிருந்து எதிர்பார்ப்பதை நான் செய்வேன். அவன் என்னை நினைவுபடுத்தினால், நானும், அவனுக்கு அருள் புரிந்து, நேர்வழி காட்டி, பாதுகாத்து, பலப்படுத்தி அவனோடு இருப்பேன். அவன் தனிமையில் என்னைத் துதித்து, ஒருமைப்படுத்தி நினைவுகூர்ந்தால், நானும் எனக்குள் அவனை நினைவுபடுத்துவேன். ஒரு கூட்டத்தில் அவன் என்னை நினைவு படுத்தினால், அவர்களை விட அதிகமான, நல்ல ஒரு கூட்டத்தில் நான் அவனை நினைவு படுத்துவேன். யார் ஒரு சாண் அளவு அல்லாஹ்வை நெருங்குகின்றாரோ, அவன் அதனை அதிகப்படுத்தி, ஒரு முழம் அளவு அவனை நெருங்குவான். யார் ஒரு முழம் அளவு நெருங்குகின்றாரோ, அல்லாஹ் அவரை ஒரு பாகம் அளவு நெருங்குவான். அவன் அல்லாஹ்விடம் நடந்துவந்தால், அல்லாஹ் அவரிடம் விரைந்தோடி வருவான். எனவே, அடியான் வணக்கங்கள் மூலம் அவனை முன்னோக்கி, நெருங்கிவந்தால், அதே போன்று கூலி வழங்கும் அடிப்படையில் அல்லாஹ் அவனை மேலும் நெருங்கிவருவான். ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணியும் போதெல்லாம், அவன் அல்லாஹ்வை நெருங்கிவருகின்றான். எனவே அல்லாஹ்வுடைய கொடையும், கூலிகளும் அடியானின் செயலையும், முயற்சியையும் விட அதிகமானது. சுருக்கமாக, அல்லாஹ்வின் கூலி, அடியானின் அமலை விட எண்ணிக்கையிலும், வகையிலும் உயர்ந்தது. எனவே ஒரு முஃமின் நல்லெண்ணம் வைத்து, அமல் செய்து, அல்லாஹ்வை சந்திக்கும் வரை விரைந்து, அதிகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்த ஹதீஸ் அல்லாஹ் கூறியதாத நபி ஸல்லல்லாஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியாகும். இவ்வாறான ஹதீஸ்கள் 'ஹதீஸ் குத்ஸீ' (புனிதமிக்க நபிமொழி), 'ஹதீஸ் இலாஹீ' (தெய்வீக நபிமொழி) எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இவ்வாறான ஹதீஸ்களின் வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும். என்றாலும் அல்குர்ஆனுக்குரிய தனித்துவங்கள் இதற்குக் கிடையாது. அதாவது அல்குர்ஆன் பெற்றுள்ள தனித்துவங்களான ஓதுவது வணக்கம், ஓதுவதற்கு வுழு செய்து கொள்ளுதல் (விரும்பத்தக்கது), சவால் விடுதல், அற்புதம் போன்றவை இவ்வகையான ஹதீஸ்களுக்கு கிடையாது.
இமாம் ஆஜுர்ரீ இவ்வாறு கூறுகின்றார்கள் : சத்தியவாதிகள் அல்லாஹ்வை, அவனே வர்ணித்தவைகளைக் கொண்டும், நபி (ஸல்) அவர்கள் வர்ணித்தவைகளைக் கொண்டும், நபித்தோழர்கள் வர்ணித்தவைகளைக் கொண்டும், வர்ணிப்பார்கள். நூதனங்களை உருவாக்காது, நபியைப் பின்பற்றிய அறிஞர்களின் போக்கு இதுவாகும். அதாவது, அஹ்லுஸ் ஸுன்னாக்கள், அல்லாஹ் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ள பெயர்களையும், பண்புகளையும், திரிபு படுத்தாமல், கருத்துக்களை மறுக்காமல், உருவகப் படுத்தாமல், ஒப்பாக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். அல்லாஹ் தன்னை விட்டும் மறுத்தவற்றை அவர்களும் மறுப்பார்கள். ஏற்றுக்கொண்டோ, மறுத்தோ வராதவைகள் பற்றி அவர்கள் மௌனித்திருப்பார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: 'அவனைப் போன்று எதுவுமில்லை. நிச்சயமாக அவனே அதிகம் கேட்பவன், மற்றும் பார்ப்பவன்.'
அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைப்பதோடு, அமலும் அவசியமாகும். ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுகின்றார்கள்: ஒரு முஃமின் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்து, நல் அமல்களில் ஈடுபடுகின்றான். ஒரு பாவி அல்லாஹ்வைப் பற்றி தப்பெண்ணம் வைத்து, தப்பான செயல்களில் ஈடுபடுகின்றான்.
குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 'என்னுடைய அடியான் என்னைப் பற்றி எண்ணுவது' என்பதன் அர்த்தம், துஆவின் போது அவன் பதிலளிப்பான் என எண்ணுவதும், தவ்பாவை அவன் ஒப்பக்கொள்வான் என எண்ணுவதும், பாவமன்னிப்புக் கேட்கும் போது அவன் மன்னிப்பான் என எண்ணுவதும், ஒரு வணக்கத்தை நிபந்தனைகளோடு நிறைவேற்றும் போது, அவனது வாக்கில் நம்பிக்கை கொண்டு, அவ்வணக்கத்திற்கு அவன் கூலி வழங்குவான் என எண்ணுவதுமாகும். எனவே ஒரு மனிதன் தனக்குக் கடமையானவற்றை, அல்லாஹ் ஒப்புக்கொண்டு பாவமன்னிப்பு வழங்குவான் என்ற நம்பிக்கையோடு செய்ய முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் அவ்வாறே வாக்களித்துள்ளான். அவன் வாக்கு மீறமாட்டான். அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்றோ, அல்லது அந்த அமல்களால் பயன் கிடைக்கமாட்டாது என்றோ நம்பினால், அல்லது எண்ணினால், அதுவே அல்லாஹ்வின் அருளில் நிராசை கொள்வதாகும். அது ஒரு பெரிய பாவமாகும். யார் அவ்வாறே மரணிக்கின்றாரோ, அவர் அவருடைய அந்த எண்ணத்திற்கே சாட்டப்படுவார். மேற்கூறிய ஹதீஸின் சில அறிவுப்புக்களில், 'அவன் என்னைப் பற்றி தான் நாடிய விதத்தில் எண்ணிக்கொள்ளட்டும்' என்றும் உள்ளது. தொடர்ந்து பாவத்தை செய்துகொண்டே, அல்லாஹ் மன்னிப்பான் என எண்ணுவது தெளிவான அறியாமையும், ஏமாற்றமுமாகும்.
உள்ளத்தாலும், நாவாலும் அல்லாஹ்வை அதிகம் நினைவுபடுத்தத் தூண்டல். தனது உள்ளத்தால், அல்லாஹ்வைப் பயந்து அவனது மகத்துவத்தையும், அவனுக்கு செய்யவேண்டிய கடமைகளையும் நினைவுகூர்ந்து, அவனின் அருளை எதிர்பார்த்து, அவனை மகத்துவப்படுத்துவார். மேலும், அவனை நேசித்து, நல்லெண்ணம் வைத்து, அமல்களை அவனுக்கு மாத்திரம் செய்வார். நாவினால், ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் எனக் கூறுவார்.
இப்னு அபீ ஜம்ரா கூறுகின்றார்கள்: பயந்த நிலையில் அல்லாஹ்வை நினைவுகூர்பவனுக்கு அல்லாஹ் பாதுகாப்பை வழங்குவான். தனிமையை உணர்ந்த நிலையில் அவனை நினைவுகூர்பவனுக்கு அல்லாஹ் ஆறுதலளிப்பான்.
சாண் எனப்படுவது, உள்ளங்கையை விரித்தால், சிறுவிரல் தொடக்கம் பெருவிரல் வரையிலான அளவாகும். முழம் என்பது, நடுவிரல் தொடக்கம், முழங்கை வரையுள்ள அளவாகும். பாகம் எனப்படுவது, மனிதனின் இரு கை முழம், சந்து, நெஞ்சு அனைத்தையும் உள்ளடக்கும் நீளமாகும். அதாவது கிட்டத்தட்ட நான்கு முழங்களாகும்.
புஹாரி (9/ 121) (7405).
முஸ்லிம் (4/ 2067) (2675).
மேலதிகமாக (11)
كنوز رياض الصالحين.
لمجموعة من الباحثين (17/ 151).
شرح رياض الصالحين.
لابن عثيمين (5/ 516).
منار القاري شرح مختصر صحيح البخاري.
حمزة محمد (5/ 372).
الجواب الكافي لمن سأل عن الدواء الشافي أو الداء والدواء (ص25).
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (2/ 510).
نزهة المتقين شرح رياض الصالحين.
لمجموعة من الباحثين (2/ 983).